சிங்கப்பூரில் கணைய மாற்று அறுவை சிகிச்சையைச் சுகாதார அமைச்சு அங்கீகரித்து உள்ளது.
அதையடுத்து அது தேசிய செயல்திட்டமாக ஆகி இருக்கிறது.
இந்த அங்கீகாரத்தின் விளை வாக தென்கிழக்கு ஆசியாவில் கணைய மாற்று அறுவை சிகிச்சை சேவை கிடைக்கும் ஒரே நாடு இப்போது சிங்கப்பூர்தான்.
கணைய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்புவோர் இப்போது தேசிய காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறலாம்.
புதிய தேசிய செயல்திட்டத்தின் கீழ், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மானியமும் உண்டு.
உடலில் சேரும் சர்க்கரை அளவை இன்சுலின் என்ற நிறமற்ற திரவம் கட்டுப்படுத்துகிறது. கணையம்தான் இன்சுலினைச் சுரக்கும். கணையம் கெட்டுவிட்டால் ஒருவருக்கு கடுமையான நீரிழிவு நோய் ஏற்பட்டுவிடும்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் 2012ல் கணைய மாற்று அறுவைசிகிச்சையை முன்னோடித் திட்ட அடிப்படையில் தொடங்கின.
இந்தத் திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள் ஏக காலத்தில் கணையம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம் என்று தேசிய கணைய மாற்று அறுவை சிகிச்சை செயல்திட்டத்தின் இயக்குநர் இணைப் பேராசிரியர் தியோங் ஹொ யீ நேற்று ஊடகத்திடம் தெரிவித்தார்.
சிறுநீரகம் செயலிழந்துவிடுவதற்கு நீரிழிவுதான் முக்கிய காரணம் என்பதை அவர் விளக்கினார்.
நீரிழிவு காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக காலத்தில் சிறுநீரகத்தையும் கணையத்தையும் மாற்றிப் பொருத்துவது நல்ல பலனை அளிக்கும் என்றார் அவர். கணைய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒரே ஒருவருக்கு செய்யப்பட்டு உள்ளது. 2012 முதல் இத்தகைய நான்கு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமான முறையில் செய்யப்பட்டு இருக்கின்றன.
புதிய தேசிய செயல்திட்டத்தின்படி, கணையத்தை மட்டும் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கணைய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 19,000 பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

