வாட்ஸ்அப் செய்தி தொடர்பில் பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் சாட்சியம்
நாடாளுமன்றத்தில் சொன்ன பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்று கட்சித் தலைவர்கள் தன்னிடம் கூறியதாக வாட்ஸ்அப் செய்தியில் திருவாட்டி ரயீசா கான் பொய் சொல்லி இருந்தார் என்றும் இதற்கு அவரிடம் காணப்பட்ட 'என்ன பேசுகிறோம் என்பதைப் புரியாமல் பேசும் ஒரு குறைபாடு' காரணமாக இருக்கலாம் என்றும் பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உரிமைக் குழு முன்னிலையில் சாட்சியம் அளித்த அவர், நவம்பர் 29ஆம் தேதி திருவாட்டி கான் பாட்டாளிக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் தனது மனநிலை பற்றி கூறியதாகவும் குறிப்பிட்டார்.
"அதை முதன்முதலாக அப்போதுதான் நான் கேட்டேன். என்ன குறைபாடு என்று நான் கேட்டதற்கு, சிந்தனையில்லாமல் நான் பேசிவிடுகிறேன் என்று திருவாட்டி கான் பதில் கூறினார்.
"நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அப்படி பேசுவது ஆபத்தானது அல்லவா என்று நான் கேட்டதற்கு ஆமாம் என்று திருவாட்டி கான் பதிலளித்தார்," என்று திரு பிரித்தம் சிங் நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் அளித்த சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
திருவாட்டி கானின் மனநிலையை மதிப்பிடுவதற்கு அல்லது அவருடைய மனநிலை பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி உரிமைக் குழு உத்தரவிட்டால், அது அநேகமாக பயன்தரக்கூடும் என்றும் திரு பிரித்தம் சிங் தன் சாட்சியத்தில் கூறினார்.
உரிமைக் குழுவின் விசாரணை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. அதற்குப் பிறகுதான் உரிமைக் குழு தனது மூன்றாவது சிறப்பு அறிக் கையை நேற்று வெளியிட்டது.
டிசம்பர் 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், திரு பிரித்தம் சிங்கிடம் ஒரு கேள்வி கேட்டார்.
திருவாட்டி கான் தன்னுடைய உதவியாளர்கள் இரண்டு பேருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் பொய் சொன்னதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கும்படி திரு பிரித்தம் சிங்கிடம் திரு எட்வின் டோங் கேட்டார்.
நாடாளுமன்றத்தில் திருவாட்டி கான் சொன்ன பொய், சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்று திரு பிரித்தம் சிங், பாட்டாளிக் கட்சியின் தலைவரான சில்வியா லிம், துணைத் தலைவரான ஃபைசல் மானாப் ஆகிய மூவரும் தன்னிடம் கூறியதாக அந்த வாட்ஸ்அப் செய்தியில் திருவாட்டி கான் குறிப்பிட்டு இருந்தார்.
இது பற்றி திரு எட்வின் டோங் கேட்டபோது, அதற்குத் திருவாட்டி கானின் சம்பந்தமில்லாமல் பேசும் ஒரு குறைபாடு காரணமாக இருக்கக்கூடும் என்று திரு பிரித்தம் சிங் கூறினார்.

