சமூகத்திற்குப் பயிற்சி அளித்து அதன்மூலம் மூத்தோர் மனநலனைக் காக்கும் நோக்கத்தில் அங் மோ கியோ குழுத்தொகுதியின் செங் சான்-சிலேத்தார் வட்டாரத்தில் ஒரு புதிய செயல்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
'பராமரிப்பு கட்டமைப்பு-நல்வாழ்வுடன் வாழ்க்கை' என்ற அந்தச் செயல்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அரசாங்க அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கட்டமைப்பை உருவாக்கி தொண்டூ ழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும் முன்னோட்ட அடிப்படையில் பல செயல்திட்டங்களை அமலாக்கி குடியிருப்பாளரின் வாழ்க்கைத் தரத்தையும் நல்வாழ்வை மேம்படுத்துவதும் செயல்திட்டத்தின் நோக்கம்.
மனோவியல் முதலுதவி, மனநலன் பற்றி நேற்று நடந்த பயிலரங்கில் சுமார் 130 அடித்தள, சமூகத் தொண்டூழியர்கள், அரசாங்க அமைப்புகளின் பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்தகைய பயிலரங்குகள் ஒரு முறை மட்டும் நடக்கும் ஒன்றாக இருக்காது. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டிலும் நடத்த செங் சான்-சிலேத்தார் திட்டமிடுகிறது. குடியிருப்பாளர்கள் மனஉளைச்சலைப் போக்கும் வகையில் கலை முகப்பு ஒன்றையும் செங் சான் சமூக மன்றம் நேற்று அறிமுகப்படுத்தியது.
'நன்னம்பிக்கை மரம்' என்ற ஓர் அம்சமும் அந்த முகப்பில் இடம்பெற்று இருக்கிறது. அதில் தன்னம்பிக்கை ஊக்கமூட்டும் தகவல்கள் நிரம்பி இருக்கின்றன.
'உங்களை நேசியுங்கள், உடல்நலத்துடன் வாழுங்கள், மற்றவர்களையும் கவனித்துக்கொள்ளுங்கள்' என்று பிரதமர் லீ சியன் லூங் வாசகமும் அதில் இருக்கிறது.

