செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2c99c11d-f5be-430d-9c89-cd5b136a6207
-

தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கமூட்ட புத்தாக்க வழிகள்

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்படி 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களுக்கு ஊக்கமூட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டு வாரியம் செயல்திட்டம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, 23,000 பேருக்கும் மேற்பட்ட முதியோர் தடுப்பூசி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 2,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளதாக வாரியம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

வாரியத்தின் இந்தச் செயல்திட்டம், ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கும் நவம்பர் 30ஆம் தேதிக்கும் இடையில் இடம் பெற்றது. அதன்படி, முதியோரைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைத்துவருவோருக்கு $30 மதிப்புள்ள பற்றுச்சீட்டு கிடைக்கும்.

இதனிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு ஊக்கமூட்டும் தேசிய முயற்சிக்கு ஆதரவாக சமய அமைப்புகளும் சில நிறுவனங்களும் புதிய புதிய வழிகளைக் கண்டுபிடித்து அமலாக்குகின்றன.

கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் ஏற்படக்கூடிய நன்மைகளை மேலும் அதிக அளவில் பகிர்ந்துகொள்ள அந்த வழிகள் உதவுகின்றன.

'ஊழியர் அலுவலகம் திரும்ப விவேகமான முடிவு அவசியம்'

சிங்கப்பூரில் டிசம்பர் 5ஆம் தேதி வாக்கில் 97 விழுக்காட்டு ஊழியர்கள் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னமும் 75,000 ஊழியர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்து உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அக்டோபர் 17ஆம் தேதி நிலவரப்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் 113,000. இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்குக் குறைந்து இருக்கிறது. அலுவலகத்திற்குத் திரும்பவேண்டும் என்றால் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற விதி ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வருகிறது.

கடந்த 270 நாட்களில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இருப்போர் அல்லது வேலை இடத்தில் இருக்க வேண்டிய தேவை உள்ள காலத்திற்கான வேலைக்கு முந்தைய பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்திருப்போர் அலுவலகம் செல்லலாம்.

இந்தப் பரிசோதனை முடிவு 24 மணி நேரம் செல்லுபடி யாகும். சிங்கப்பூரின் ஆகப் பெரிய முதலாளியான அரசாங்கச் சேவைப் பிரிவில் வேலை பார்க்கும் 153,000 பேரில் 99% முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் ஆகப்பெரிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த்தில் வேலை பார்க்கும் 40,000 பேருக்கும் மேற்பட்டவர்களில் 99.5%க்கும் அதிகமானவர்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

முன்கள போக்குவரத்து ஊழியர்களில் 99% முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வேளையில், வேலை இடத்தைத் திறந்துவிட பல நிறுவனங்களும் ஆயத்தமாக இருக்கின்றன என்றாலும் ஓமிக்ரான் தலை எடுப்பது, ஊழியர்களின் நல்வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவேகமான முறையில் செயல்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.