இளையர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும், வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும் - இந்த இலக்குகளை நோக்கி இளையர்கள் சிலர், இந்திய முஸ்லிம் பேரவை தொடங்கியுள்ள இளையர் அணியை வழிநடத்திச் செல்ல இருக்கின்றனர்.
குடும்பம், கல்வி, வாழ்க்கைத்தொழில், உறவுகள் போன்ற வாழ்வியல் அங்கங்களில் இந்திய முஸ்லிம் இளையர்களுக்கு உதவுவது இந்தப் புதிய அணியின் நோக்கம். பதின்ம வயதினருக்கும் இருபதுகளில் இருப்போருக்கும் நெருக்கமான முறையில் இருப்போம் என்று இளையர் அணியின் தலைவர் தாரிக் நிஸார் அக்பரும் துணைத்தலைவர் முகம்மது ஆஷிக்கும் கூறினர்.
இம்மாதம் 4ஆம் தேதியன்று இளையரணி, பொதுச் சேவை மன்றத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியைச் சிறப்பித்த கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் ஆல்வின் டான், இந்த இளையர் அணி சமுதாயத்திற்கு முக்கியமானத் திட்டமாக வர்ணித்தார்.
"மக்கள்தொகையில் இளையர்கள் 25 விழுக்காட்டினராக இருந்தாலும் அவர்களே நம் எதிர்காலத்தின் 100%," என்றார் திரு டான்.
சிண்டா, சீக்கியர் ஆலோசனை குழு மற்றும் 'ஹேஷ்பீஸ்' உடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு, 'ஹேஷ்பீஸ்' தலைவர் நஸ்ஹத் ஃபஹீமா, சீக்கியர் ஆலோசனைக் குழுவின் தலைவர் மல்மிந்தர்ஜித் சிங் ஆகியோர் பங்கேற்ற அக்கலந்துரையாடலை தமிழ் முரசு செய்தியாளர் இர்ஷாத் முஹம்மது வழிநடத்தினார்.
சமூகத்திற்கு உதவுதல், சமய ரீதியான வளர்ச்சி, தனிப்பட்ட வளர்ச்சி ஆகிய பிரிவுகளில் நடவடிக்கைகள் இடம்பெறும். 13 உறுப்பினர்கள் கொண்ட இளையரணிச் செயற்குழு, அந்நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும்.
"உறுப்பிய முறை கிடையாது. நடவடிக்கைகள் எப்போதெல்லாம் ஏற்பாடு செய்யப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஆர்வமுள்ள இளையர்கள் தாராளமாக முன்வந்து பங்கேற்கலாம்," என்றார் 33 வயதான திரு தாரிக்.
பாலின சமத்துவத்திற்காக அதிகமான பெண்களை ஈர்க்க முற்படுவதாகக் கூறிய 25 வயது ஆஷிக், "பெண்களின் கண்ணோட்டத்தை அறிந்துகொள்வது மிகவும் நல்லது. பெண்கள் முன்வந்து எங்களது அமைப்பில் தலைமைப் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என விரும்புகிறோம்," என்றும் சொன்னார்.
செய்தி: கி.ஜனார்த்தனன்