சிங்கப்பூரரின் பெயரில் வீடு வாங்க முயன்றதாக வெளிநாட்டவர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரரின் பெயரில் வீடு வாங்க முயன்றதாக வெளிநாட்டவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
3dc34610-0bc3-47b5-8036-ef39a1b87a14
220 பெல்கிரேவியா வில்லாஸ் எனும் முகவரியில் உள்ள ஒரு தரை வீட்டை வாங்க தமது சார்பில் சிங்கப்பூரரை ஒருவரை நியமித்ததாகச் சீன ஆடவர் ஒருவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் படம் -

அங் மோ கியோ வட்டாரத்தில் தமது சார்பில் ஒரு தரை வீட்டை வாங்க சிங்கப்பூரர் ஒருவரை நியமித்ததாக 39 வயது சீன நாட்டவர்மீது குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின்கீழ் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

ஒரு வெளிநாட்டவராக, அவ்வீட்டை வாங்க சென் சியாவ்பு அந்த ஆடவர் சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும்.

சென்னால் வீடு வாங்க நியமிக்கப்பட்ட சோங் ஃபன்ரோங், 49, எனும் பெண்மீது இதுபோன்ற மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார் என்றும் நாளை செவ்வாய்க்கிழமை அவற்றை அவர் ஒத்துக்கொள்ள இருக்கிறார் என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

220, பெல்கிரேவியா வில்லாஸ் எனும் முகவரியில் அமைந்துள்ள அவ்வீட்டை வாங்க, 2014 செப்டம்பர் 8ஆம் தேதி சோங்கைத் தமது சார்பில் நியமித்தார் என்பதே சென்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம்.

சென் வெளிநாட்டவர் என்பதால் அவரால் சிங்கப்பூரில் சொத்து வாங்க முடியாது என்று சோங் அவரிடம் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனை வர்த்தக் குற்ற விசாரணைப் பிரிவு கண்டுபிடித்ததாகக் காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.

அதனால், சென் சார்பில் அவ்வீட்டைத் தன் பெயரில் வாங்குவதாகவும் சென்னுக்குச் சிங்கப்பூர்க் குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதி கிடைத்தபின் அதனை அவர் பெயருக்கு மாற்றிவிடுவதாகவும் சோங் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சென் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் அதன்பின் அவ்வீட்டை வாங்குவதற்கான பணத்தின் ஒரு பகுதியை சோங்கிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் வரும் சொத்துகளை வாங்க வெளிநாட்டவர்கள் முன்அனுமதி பெற வேண்டும் என்று சிங்கப்பூர் நில ஆணைய இணையத்தளம் கூறுகிறது.

தன் பெயரில் வீடு வாங்க சோங்கை நியமித்தபோதும் அந்த உடன்பாடு சட்டபூர்வமாகச் செல்லாது என்பது பிறகு சென்னுக்குத் தெரியவந்தது.

அடுத்த மாதம் 24ஆம் தேதி சென் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்புச் சொத்துச் சட்டத்தின்கீழ் அவரது குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால், அவருக்கு $100,000 வரை அபராதம், மூன்றாண்டு வரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.