உப்பைக் குறைத்துக்கொள்ள மேலும் வாய்ப்புகள், உணவுகள்

உப்பைக் குறைத்துக்கொள்ள மேலும் வாய்ப்புகள், உணவுகள்

1 mins read
192c215e-b8ee-4ced-a846-2c61285280f9
-

சிங்கப்பூரர்கள் உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்ள உதவுவதற்காக மேலும் உப்பு குறைவான உணவுப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன. அத்தகைய 200க்கும் மேற்பட்ட உப்பு குறைந்த உணவுப் பொருட்களும் குழம்பு வகைப் (சாஸ்) பொருட்களும் இப்போது சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கின்றன. உடல்நலனுக்கு உகந்த அத்தகைய பொருட்களில், அதே போன்ற இதர உணவுப் பொருட்களில் இருப்பதை விட குறைந்தபட்சம் கால்வாசி அளவுக்கு உப்பு குறைவாக இருக்கும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள உதவ தான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வாரியம் கூறியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஒருவர் நாள் ஒன்றுக்கு 2,000 மில்லிகிராம் அளவுக்குத்தான் உணவில் உப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வரம்பு விதித்துள்ளது. ஆனால் 10ல் ஒன்பது பேர் அந்த அளவைவிட அதிகமாக உப்பைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது இந்த வாரியம் சென்ற மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக உப்பைச் சேர்த்துக்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் காரணமாக இரத்தக் குழாய்களின் சுவர்கள் தடித்துப்போகும். இரத்தம் சரளமாக ஓடுவது தடைப்படும். இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிவிடும். சிங்கப்பூரில் இடம்பெறும் மரணங்களில் மூன்றில் ஒன்றுக்கு இதுதான் காரணமாக இருக்கிறது.