மின்னியல் பொருள்களின் பாகங்கள், கண்ணாடி வில்லைகள் போன்றவற்றை மனிதர்களைப் போல மாற்ற இப்போது இயந்திர மனிதர்களால் முடியும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினால் மனித கைகளுக்கு நிகரான துல்லியத்தைக் கொண்டுள்ள இயந்திர மனித கைகளை 'யூரிக்கா ரோபோட்டிக்ஸ்' இயந்திரவியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
டொயோட்டா குழுமத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் டென்ஸோ இதனை பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் செய்யும் சுவாரசியமற்ற, பல முறை செய்யவேண்டிய சில வேலைகளிலிருந்து விடுபடலாம் என்று 'யூரிக்கா ரோபோட்டிக்ஸ்' ஆய்வுக் கூடத்தின் நிறுவனர்களான பேராசிரியர் பாம் குவான் கோங்கும் டாக்டர் ஹுங் பாமும் தெரிவித்தனர். இந்த இயந்திரக் கைகள், மனிதக் கைகளைப் போல பிழைகளைச் செய்யாது என்பதும் மற்றொரு சிறப்பு அம்சம்.
இந்தத் தொழில்நுட்பம் தற்போது மின்னணுவியல் துறையிலும் வாகனத்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக டென்ஸோ வேவ்வின் இயந்திரவியல் வர்த்தகப் பிரிவின் தயாரிப்புத் திட்டமிடுதல் பிரிவைச் சேர்ந்த திரு இரோயாசு பாபா தெரிவித்தார். சமைக்கப்படாத உணவின் பதனீட்டுக்கு இந்த இயந்திரக் கைகளைப் பயன்படுத்தவும் திட்டங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

