கட்டுமானத் தள விபத்தில் வெளிநாட்டு ஊழியர் உயிரிழப்பு

1 mins read
92554857-3eae-48c0-bf80-00de4c23ecea
இவ்வாண்டில் இதுவரை வேலையிட விபத்துகளில் குறைந்தது 35 பேர் மாண்டுவிட்டனர். படம்: இணையம் -

எஃகு கம்பிகள் மேலிருந்து விழுந்ததில் பங்ளாதேஷைச் சேர்ந்த 31 வயது கட்டுமான ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பாரந்தூக்கி மூலம் எஃகு கம்பிகள் மேலே தூக்கப்பட்டபோது இவ்விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

பிடோக் நீர்த்தேக்கப் பூங்காவிற்கு அருகே உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் கடந்த சனிக்கிழமையன்று இவ்விபத்து நிகழ்ந்தது.

அவ்விடத்தில் உள்துறைக் குழு தேசிய சேவையாளர்களுக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

900, பிடோக் நார்த் ரோடு எனும் முகவரியில் நிகழ்ந்த இவ்விபத்து குறித்துக் காலை 9.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

'சின் லீ கன்ஸ்ட்ரக்‌ஷன்' எனும் நிறுவனத்திற்காக வேலை செய்து வந்த அந்த ஊழியர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

விபத்து குறித்து மனிதவள அமைச்சும் காவல்துறையும் விசாரித்து வருகின்றன.

அந்தக் கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கிச் செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவைக்க அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இதனுடன் சேர்த்து, இவ்வாண்டில் வேலையிடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் குறைந்தது 35 பேர் மாண்டுவிட்டனர். இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 30ஆகவும் 2019ஆம் ஆண்டில் 39ஆகவும் பதிவானது.