2022 டிசம்பர் 31 வரை உணவங்காடி நிலையங்களில், கடைகளில் பயன்படுத்தலாம்
சிங்கப்பூரில் அனைத்து குடிமக்கள் குடும்பங்களும் இப்போது $100 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதை ஏறத்தாழ 10,000 உணவங்காடி நிலையங்களிலும் இதர கடைகளிலும் செலவிடலாம்.
'சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு' என்று குறிப்பிடப்படும் அவற்றின் மொத்த மதிப்பு $130 மில்லியன். அந்தச் சீட்டுகளை மொத்தம் 1.3 மில்லியன் குடும்பங்கள் பெறும்.
பற்றுச்சீட்டுகள் நேற்று முதல் மின்னிலக்க வழிகளில் விநியோகிக்கப்படுகின்றன. 2022 டிசம்பர் 31 வரை அவற்றைச் செலவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு சிங்கப்பூரருக்குப் பற்றுச்சீட்டு கொடுக்கப்படும். சிங்பாஸ் ஏற்பாட்டின் மூலம் இணையத்தில் தொடர்புகொண்டால் பதிவுபெற்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு முகவரி அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பற்றுச்சீட்டைப் பெறமுடியும்.
பற்றுச்சீட்டுகள் $2, $5, $10 வடிவில் கிடைக்கும். மின்னிலக்க ரீதியில் பற்றுச்சீட்டைப் பெற முடியாதவர்கள் சமூக நிலையங்களை அல்லது மன்றங்களை அணுகி உதவி பெறலாம்.
மின்னிலக்க ரீதியில் பற்றுச்சீட்டை அதற்கான செயலியில் கியூஆர் குறியீடு மூலம் பயன்படுத்தலாம். பற்றுச்சீட்டை யாருக்கும் விற்க முடியாது.
சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுத் திட்டம் முதன்முதலாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. குறைந்த வருமானம் உள்ள 400,000 குடும்பங்கள் அதன் மூலம் பலன் அடைந்தன.
பிறகு இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக பற்றுச்சீட்டு கொடுக்கப்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக அது கொடுக்கப்படுகிறது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நடந்தது. பிரதமர் லீ சியன் லூங் அதில் கலந்துகொண்டு மூன்றாவது பற்றுச்சீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஐந்து மாவட்டங்களின் மேயர்களும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். கொவிட்-19 சூழலில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வை அங்கீகரிக்கும் வகையில் அரசாங்கம் இந்தப் பற்றுச்சீட்டுகளை வழங்குவதாக பிரதமர் தெரிவித்தார்.
மக்களும் இதில் பங்கெடுத்துக்கொள்ளும் கடைகளும் எளிதாக கையாளும் வகையில் பற்றுச்சீட்டுத் திட்டம் மின்னிலக்கமயமாகி உள்ள தாக மக்கள் கழகத்தின் தலைவருமான திரு லீ குறிப்பிட்டார்.
இந்தப் பற்றுச்சீட்டு திட்டத்தை வடிவமைப்பதில் அரசாங்க அமைப்புகளோடும் சமூகப் பங்காளிகளோடும் சேர்ந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டதாக பிரதமர் கூறினார்.
குடியிருப்பாளர்களுக்கு எல்லா சமூக நிலையங்களிலும் மன்றங்களிலும் உதவி கிடைக்கும் என்றும் தெரிவித்த திரு லீ, மூத்தோர் தலைமுறை அலுவலக தூதர்கள் வீடுவீடாகச் சென்று முதியோருக்குப் பற்றுச்சீட்டு பற்றி விளக்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த முறை இத்தகைய ஒரு திட்டத்தை அமல்படுத்தும்போது ஒவ்வொருவருக்கும் அது மிகவும் எளிமையாகவும் வசதியாகவும் இருக்குமாறு நாம் செய்யலாம் என்றும் இப்போது இந்த விநியோக நடைமுறை மூலம் கிடைக்கும் அனுபவம் அதற்கு உதவும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

