சிங்கப்பூரரைக் கொண்ட குடும்பங்களுக்கு இம்மாதம் 12ஆம் தேதி நிலவரப்படி 920,000க்கும் மேற்பட்ட 'ஸ்டேவெல்' வாய்க்கொப்புளிப்புத் திரவ போத்தல்கள் விநியோகிக்கப்பட்டதாக தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.
இந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக ஓரறை முதல் நான்கறை வரைப்பட்ட வீடுகளின் அஞ்சல் பெட்டிகள் மூலம் ஏறத்தாழ 780,000 போத்தல்கள் விநியோகிக்கப்பட்டன என்று அந்த லாபநோக்கமற்ற அறநிறுவனம் குறிப்பிட்டது.
தொண்டை எரிச்சலை உண்டாக்கும் கிருமிகளை, ஸ்டேவெல் வாய்க் கொப்புளிப்புத் திரவத்தைக் கொண்டு வாயைச் சுத்தப்படுத்துவது மூலம் ஒழிக்க முடியும். இந்த அறநிறுவனம் 'ஆயத்தமாக இருப்போம்' என்ற ஒரு செயல்திட்டத்தை அமல்படுத்தியது.
நோய் பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட அந்தச் செயல்திட்டத்தின்கீழ் வாய்க் கொப்புளிப்புத் திரவ போத்தல்கள் கொடுக்கப்பட்டன.
இந்தத் திட்டத்திற்குக் குடும்பங்கள் கொடுத்த ஆதரவு மனநிறைவாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அறநிறுவனம், இதில் ஆதரவு அளித்த பங்காளி நிறுவனங்களுக்கு நன்றி கூறியது. அறநிறுவனம் முகக்கவசங்களையும் இலவசமாக விநியோகித்து வருகிறது.
அடுத்ததாக அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை முகக்கவசம் விநியோகிக்கப்படும் என்று சென்ற மாதம் ஃபேஸ்புக்கில் இது தெரிவித்தது. இதன் தொடர்பிலான மேல் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.

