ஆர்ச்சர்ட் ரோட்டின் ஆகப் பழமையான சில்லறை வர்த்தக அடையாளக் கட்டடங்களில் ஒன்றாகத் திகழும் தங்ளின் கடைத்தொகுதி கட்டட இடம் நான்காவது தடவையாக ஒட்டுமொத்த விற்பனைக்கு வருகிறது.
விலை $828 மில்லியன் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
313,435 சதுர அடி மொத்த தரை பரப்பு அடிப்படையில் கணக்கிட்டு பார்க்கையில், ஒரு சதுர அடிக்கு $2,642 என்ற விலைக்கு அதை ஒட்டுமொத்தமாக வாங்க முடியும்.
முழு பரப்பளவையும் வர்த்தகப் பயனீட்டுக்குப் பயன்படுத்தலாம் என்ற அனுமானத்தின் பேரில் இந்தக் கணக்கீடு இடம்பெறுகிறது.
அந்தக் கட்டடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து 80 விழுக்காட்டு அனுமதி நவம்பர் மாதம் பெறப்பட்டுவிட்டதாகவும் பொது ஏலக்குத்தகை மூலம் அந்தக் கடைத்தொகுதிக் கட்டடம் மொத்தமாக இன்று விற்பனைக்கு விடப்படும் என்றும் 'சாவில்ஸ்' என்ற சந்தைத் துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்டி டெவலப்மெண்ட் நிறுவனத்தின் ஹோட்டல்துறை நிறுவனமான மில்லினியம் & கோப்தோர்ன் ஹோட்டல்ஸ் நிறுவனம், தங்ளின் கடைத்தொகுதி கட்டடத்தில் 34 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட பாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.
அந்த இடத்தின் ஆகக் குறைந்த விலை $785 மில்லியன் என்று பிசினஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விலை, 2011ல் $1.25 பில்லியனாக இருந்தது. ஆனால் அது எட்டப்படவில்லை. இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளும் பொது ஏலக்குத்தகை முயற்சிகளை எட்டவில்லை.
தங்ளின் கடைத்தொகுதிக் கட்டடம் 12 மாடி வளாகமாகும். அதில் இரண்டு கீழ்த்தளங்கள் இருக்கின்றன. அதனுடன் இணைந்த எட்டுமாடி கார்பேட்டை கட்டடமும் இருக்கிறது.
மொத்தம் 364 சில்லறை வர்த்தகக் கடைகளும் அலுவலக இடங்களும் அங்கு உள்ளன. அந்தக் கட்டடத்தின் பிரதான வளாகம் 1970களில் கட்டப்பட்டது. பிறகு அலுவலகக் கட்டடம் நீட்டிக்கப்பட்டு 1980களில் கட்டி முடிக்கப்பட்டது.
தங்ளின் கடைத்தொகுதி கட்டட இடத்தை மொத்தமாக வாங்கி அதில் புதிதாக கட்டடங்களை எழுப்பும் நிறுவனங்களுக்குப் பல வாய்ப்புகள் உள்ளன.
அலுவலகம், ஆடம்பரமான சில்லறை வர்த்தகக் கடைகள், குடியிருப்பு மற்றும் ஹோட்டலைக் கட்ட முடியும்.

