செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
56369700-0e89-4c00-95db-f26ff3197682
-

எஸ்பிஎஸ் சேவை 20 மற்றும் 35 பேருந்துகள் சேவை கூடும்

எஸ்பிஎஸ் நிறுவனத்தின் சேவை எண் 20 மற்றும் சேவை எண் 35 பேருந்துகள் டிசம்பர் 26ஆம் தேதி முதல் சாங்கி பிசினஸ் பார்க் விஸ்தாவிலும் ஏவியேஷன் பார்க் ரோட்டிலும் மேலும் மூன்று பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புதிய நிறுத்தங்கள், பயணிகளின் பயணத் தேவைகளை இன்னும் சிறந்த முறையில் நிறைவேற்றும் என்று எஸ்பிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்துகளின் வழித்தடங்களிலும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் இருக்காது என்று அது தெரிவித்தது.

சேவை எண் 20 பேருந்து சாங்கி பிசினஸ் பார்க் கிரசெண்டிற்கு அடுத்ததாக இருக்கும் நிலையத்தில் நின்று செல்லும். அதேபோல் சேவை எண் 35 பேருந்து ஏவி யேஷன் பார்க் ரோட்டில் உள்ள இரண்டு புதிய நிறுத்தங் களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உப்பைக் குறைத்துக்கொள்ள மேலும் வாய்ப்புகள், உணவுகள்

சிங்கப்பூரர்கள் உணவில் உப்பைக் குறைவாக சேர்த்துக் கொள்ள உதவுவதற்காக மேலும் உப்பு குறைவான உணவுப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன.

அத்தகைய 200க்கும் மேற்பட்ட உப்பு குறைந்த உணவுப் பொருட்களும் சுவையூட்டி வகைப் (சாஸ்) பொருட்களும் இப்போது சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கின்றன.

உடல்நலனுக்கு உகந்த அத்தகைய பொருட்களில், அதே போன்ற இதர உணவுப் பொருட்களில் இருப்பதை விட குறைந்தபட்சம் கால்வாசி அளவுக்கு உப்பு குறைவாக இருக்கும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரர்கள் உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள உதவ தான் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வாரியம் கூறியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஒருவர் நாள் ஒன்றுக்கு 2,000 மில்லிகிராம் அளவுக்குத்தான் உணவில் உப்பைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வரம்பு விதித்துள்ளது. ஆனால் 10ல் ஒன்பது பேர் அந்த அளவைவிட அதிகமாக உப்பைச் சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது இந்த வாரியம் சென்ற மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமாக உப்பைச் சேர்த்துக்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் காரணமாக இரத்தக் குழாய்களின் சுவர்கள் தடித்துப்போகும். இரத்தம் சரளமாக ஓடுவது தடைப்படும். இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிவிடும். சிங்கப்பூரில் இடம்பெறும் மரணங்களில் மூன்றில் ஒன்றுக்கு இதுதான் காரணமாக இருக்கிறது.

ஓமிக்ரான் அச்சம்: பல நாடுகளில் புதிய எல்லைக் கட்டுப்பாடுகள்

சிங்கப்பூரும், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான தனிமை உத்தரவில்லா பயண ஏற்பாடுகளை அது செய்து கொண்டுள்ள பல நாடுகளும் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.

கொவிட்-19 உருமாறிய ஓமிக்ரான் கிருமித்தொற்றே அதற்கான காரணம். அத்தகைய நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஆகியவை உள்ளடங்கும்.

இந்த நாடுகளில் பரிசோதனை ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. ஆஸ்திரேலியா செல்வோர் அங்கு தரை இறங்கியதும் குறைந்தபட்சம் 72 மணிநேரம் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

விமானப் பயண முன்பதிவு ரத்து விகிதம் குறைவு

கொவிட்-19 கிருமி முதன்முதலில் தலைகாட்டியபோது சுற்றுப் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர். ஆனால் இப்போதைய ஓமிக்ரான் சூழலில் அந்த அளவுக்கு அவர்களிடம் பயம் இருப்பதாகத் தெரியவில்லை.

பயண முன்பதிவுகளை ரத்து செய்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. டிசம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூருக்கு வருவதற்கான பயண முன்பதிவுகளில் 41 விழுக்காடுதான் ரத்தாகி இருந்தது.

இந்த அளவு டிசம்பர் 2ஆம் தேதி 58 விழுக்காடாக இருந்தது என்று விமானப் பயணப் பகுப்பாய்வு நிறுவனமான 'ஃபார்வர்ட்கீய்ஸ்' கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. அதேபோல் இங்கிருந்து செல்வதற்கான முன்பதிவுகளைப் பார்க்கையில், ரத்து அளவு நவம்பர் 30ஆம் தேதி 48%ஆக இருந்தது. அது முதல் அந்த அளவு 42% ஆகக் குறைந்துள்ளது.

என்றாலும்கூட, ஓமிக்ரான் தொற்று தலைகாட்டியதற்கு முன் முன்பதிவு ரத்து அளவு ஏறத்தாழ 28 விழுக்காடாகத் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட இப்போதைய ரத்து எண்ணிக்கை அதிகமாக உள்ளது.