தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய சொற்கள், வரைபடங்களுடன் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறார்.
பழுத்த அனுபவமிக்க ஆய்வாளரும் அறிவியல் அறிஞருமான அவர் இப்போது 'எனது கொரோனா கிருமி கதை' (My Coronavirus Story) என்ற ஒரு புத்தகத்தைப் பாடல் வடிவில் எழுதி இருக்கிறார்.
ஐந்து வயது உள்ளிட்ட சிறார்களும் இளையரும் உருவாக்கி இருக்கும் படங்களுடன் அந்தப் புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
சிறார் ஒருவரின் பார்வை வழி தொற்றுக் கண்ணோட்டம் அதில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
கொவிட்-19 பற்றி இளைஞர்களுக்குப் பலவற்றையும் எடுத்துக்கூறி போதிப்பதும் தொற்றில் இருந்து மீண்டுவர ஊக்குவிப்பதும் அந்தப் புத்தகத்தின் நோக்கம்.
நான்கு முதல் 12 வயது வரையுள்ள சிறார்களுக்காக எழுதப்பட்டு உள்ள அந்தப் புத்தகத்தை நேற்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெளியிட்டார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் ஆதரவுடன் உருவாகி இருக்கும் அந்தப் புத்தகம், முன்களப் பணியாளர்களுக்குப் புகழாரம் சூட்டி சிறப்பிக்கிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் பேராசிரியர் லியோ அமைச்சருடன் சேர்ந்து அந்தப் புத்தகத்தை வாசித்தார்.
புத்தகம் பற்றி கருத்துரைத்த பேராசிரியர் லியோ, தொடக்கத்தில் தான் தயங்கியதாகவும் இருந்தாலும் கடந்த மார்ச்சில் நடந்த ஒரு கண்காட்சியில் முன்கள சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களைப் பாராட்டி சிறார்கள் தாக்கல் செய்து இருந்த ஓவியங்கள் தம்மை கவர்ந்து புத்தகத்தை எழுதுமாறு செய்ததாகவும் தெரிவித்தார்.
ஐந்து முதல் 11 வரை வயதுள்ள சிறார்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி தடுப்பூசி போடப்படும் என்று அண்மையில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்தப் புத்தகம் வெளியிடப்படும் காலநேரம் அதையொட்டியதாக இருக்கிறது என்றும் பேராசிரியர் லியோ குறிப்பிட்டார்.
ஏறத்தாழ 1,000 பிரதிகள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. அதைப் பொதுமக்கள் தேசிய நூலக வாரியத்தின் பொது நூலகங்களில் இருந்து இரவலாகப் பெறலாம். தொடக்கப்பள்ளிகளுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கப்படும்.
இதனிடையே, புதிய புத்தகம் பற்றி கருத்துரைத்த அமைச்சர் திரு ஓங், இந்தத் தொற்றை வெற்றி கரமான முறையில் கடந்து ஒளிமயமான எதிர்காலத்தை நாம் பெற்றிருப்போம் என்று நம் சிறார்களிடம் நாம் கொண்டிருக்கும் நம்பிக் கையை அந்தப் புத்தகம் பிரதிநிதிப்பதாகத் தெரிவித்தார்.

