புதிய மலரும் நட்புறவுத் திட்டம் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் மாதத்துக்கு ஒருமுறை கரையோரப் பூந்தோட்டத்துக்குச் சென்று அதன் அழகை ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அத்துடன், வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உள்ளூர் தொண்டூழிய வழிகாட்டிகளுக்கும் இடையிலான இருவழித் தொடர்பு மூலம் சமூகங்களுக்கு இடையிலான நட்புறவை வலுப்புடுத்துவதே இத்திட்டத்தின் இலக்கு.
அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு இந்த மலரும் நட்புறவுத் திட்டம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கரையோரப்
பூந்தோட்டத்தில் நேற்று சுற்றுலா மேற்கொண்டனர்.
டச் இன்டர்நேஷனல், கரையோரப் பூந்தோட்டம் ஆகியவற்றின் உதவியோடு வெஸ்ட்லைட் துவாஸ் அவென்யூ 2ல் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.
அங்கு அவர்கள் கிலௌட் ஃபாரஸ்ட், ஃபிளவர் டோம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.
மலரும் நட்புறவுத் திட்டத்துக்கு சிங்கப்பூர் ரட்சணிய சேனையும் டச் இன்டர்நேஷனல் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இத்திட்டத்துக்கு வெஸ்ட்லைட் தங்குவிடுதி நிறுவனத்துடன் இணைந்து கரையோரப்
பூந்தோட்டம் ஆதரவு வழங்குகிறது.
திட்டத்தின் துவக்க விழாவில் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கலந்துகொண்டார்.
சீனாவைச் சேர்ந்த சில ஊழியர்களுடன் சேர்ந்து அவரும் கரையோரப் பூந்தோட்டத்தில் சுற்றுலா மேற்கொண்டார்.
திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் மனிதவள அமைச்சு, கார்ப்பரேட் எலாயன்ஸ் ஃபார் குட் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நேற்றைய சுற்றுலாவில் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று தலைதூக்கியதிலிருந்து தங்குவிடுதியிலும் வேலையிடத்திலும் மட்டுமே இருக்க பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்குத் திரும்பி தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க முடியாத நிலை மட்டுமின்றி சிங்கப்பூரிலும் தங்கள் விருப்பம்போல நடமாட முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வரும் அவர்களது தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

