செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f6e8430d-2534-482f-b8dd-55e3ac10c33a
-

தடம் பதித்த இளம் விஞ்ஞானிகளுக்கு விருது

இளம் வயதிலேயே முத்திரை பதித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இளம் விஞ்ஞானி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

டாக்டர் சாங் ஹான்வாங், டாக்டர் யிவோன் காவ், டாக்டர் சாரா லுவோ ஆகிய மூவருக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கடந்த வெள்ளிக்கிழமையன்று விருதுளை வழங்கினார்.

தற்போதைய உயர் ரக கணினிகளைவிட அதிக ஆற்றல்மிக்க குவான்டம் கணினிக்குத் தேவையான வன்பொருளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவைச் சேர்ந்த 33 வயது டாக்டர் காவ் தயாரித்து வருகிறார்.

உணவு சாப்பிடும் முறை, பழக்கவழக்கம் ஆகியவற்றை நமது மூளையில் உள்ள நியூரோன்கள் தீர்மானிப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் ஏஸ்டார் அமைப்பின் மூலக்கூறு, உயிரணு உயிரியல் பிரிவைச் சேர்ந்த 35 வயது டாக்டர் லுவோ கண்டுபிடித்துள்ளார்.

தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, உடல் பருமன் ஏற்படுவது ஆகியவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து தீர்வு காண இந்தத் தரவுகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அறிவார்ந்த, புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 34 வயது டாக்டர் சாங் ஹான்வாங்.

அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கு முக்கியமாக விளங்கக்கூடிய அம்சங்களை டாக்டர் சாங்கும் அவரது குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.

கூண்டைவிட்டு வெளியேறிய சிங்கங்களால் நிலவிய பதற்றம்

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த இரண்டு சிங்கங்கள் சாங்கி விமான நிலையத்தில் கூண்டிலிருந்து வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது. அந்த இரண்டு சிங்கங்களில் ஒன்று தனது கூண்டின் மேல் படுத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மயக்க மருந்து பொருத்திய துப்பாக்கியால் அவை சுடப்பட்டதாகவும் இரு சிங்கங்களும் மயக்கமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவை இரண்டும் மண்டாய் வனவிலங்குக் குழுவின் பராமரிப்பின்கீழ் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்பில்லா மின்னிலக்கக் கட்டணம் செலுத்தும் முறை அதிகரிப்பு

கொவிட்-19 சூழலில் தொடர்பில்லா மின்னிலக்கக் கட்டணம் செலுத்தும் முறையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் பேநவ் பரிவர்்த்தனைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்க இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை பேநவ் பரிவர்த்தனைகள் $64 பில்லியனை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் $25 பில்லியன் பெறுமானமுள்ள பேநவ் பரிவர்த்தனைகள் மட்டுமே பதிவானதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் தெரிவித்தது.

உடனடி நிதி அனுப்பும் சேவைப் பரிவர்த்தனைகளும் பெருமளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அது $109 மில்லியனாக இருந்தது.

இவ்வாண்டு அதே காலகட்டத்தில் அது $185 மில்லியனாக உயர்ந்தது.