அமலாக்க அதிகாரிகளை மோசமாக திட்டியதோடு இனத்தைக் குறிப்பிட்டு பேசியதற்காக நேற்று 58 வயது சுபைடா சைனூல் அபிதீனுக்கு 3,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
அவரது மகள் சட்டவிரோதமாக புகைபிடித்துக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்ததால் அவர் ஆத்திரமடைந்த தாகத் தெரிகிறது.
மலேசியரான திரு காளிதாசன் நாகப்பனும் 31, அவரது சக அமலாக்க அதிகாரியும் பிடோக் ரிசர்வோர் ரோட்டில் உள்ள புளோக்கின் காலியிடத்தில் சுபைடாவின் மகள் நூருல் அசியகின் அப்துல் ரஹ்மான் புகைபிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். இரு செர்ட்டிஸ் சிஸ்கோ அதிகாரிகளும் அப்போது தேசிய சுற்றுப்புற வாரியத்துக்காக வேலை செய்தனர்.
அழைப்பாணை அனுப்புவதற்காக அடையாள அட்டையைக் கேட்டபோது நூருல் தன்னிடம் இல்லையென்று கூறினார். இதனால் தனது தாயாரை அடையாள அட்டையை நூருல் எடுத்து வரச் சொன்னார். அங்கு வந்த சுபைடா, மகளின் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் காட்ட மறுத்துவிட்டார். காவல்துறையினர் வந்த பிறகே அடையாள அட்டையை காட்டுவேன் என்று சுபைடா கூறியதால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
அதற்குள் அதிகாரிகளை ஆங்கிலம் மற்றும் மலாய் மொழியில் தகாத வார்த்தைகளால் சுபைடா சாடினார். கன்னத்தில் அறைவதாகவும் அவர் மிரட்டினார்.
அங்கு வந்த காவல்துறையினர் அடையாள அட்டையைப் பெற்று நூருலின் விவரங்களை காளிதாசனிடம் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தப்பட்ட சுபைடா, தான் வேலை செய்யாததால் கருணை காட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து 200 வெள்ளி அபராதத்தை உடனே கட்டுமாறும் எஞ்சிய 2,800 வெள்ளியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் சுபைடாவுக்கு உத்தரவிடப்பட்டது.

