எச்ஐவி கிருமிப் பாதிப்புள்ள ஆடவர் ஒருவருக்கு 14 வயது சிறுமியுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதால் 13 ஆண்டு, இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பேசிய அரசாங்க வழக்கறிஞர், 14 வயது சிறுமியை 17 முறை வீட்டுக்கு வரவழைத்து மூன்று மாதங்களில் வாரம் குறைந்தது இரண்டு முறையாவது பாலியல் உறவில் குற்றவாளி ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சிறுமிக்கு எச்ஐவி கிருமி தொற்றவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 41 வயது ஆடவர் தன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். சிறு வயது பெண்ணிடம் உடலுறவில் ஈடுபட்டது, தொற்றுநோய் சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் ஆகியவைஅவற்றில் அடங்கும். அவர் மீதான இதர 25 குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறுமியின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக இருவரது பெயரையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2011 ஜூலையில் அவருக்கு எச்ஐவி கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. உடலுறவில் ஈடுபடும் பெண்ணிடம் தனது உடல் நிலைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே கடையில் திருடிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவர், 2019 ஜனவரியில் விடுவிக்கப்பட்டார்.

