மலிவு விலையிலான, மறுமுறை மின்னூட்டம் செய்யவல்ல (rechargeable), முற்றிலும் மட்கிப் போகக்கூடிய தாள் மின்கலத்தை (paper battery) சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்க் குழு உருவாக்கியுள்ளது.
வலிவூட்டப்பட்ட தாளின் ஒரு பக்கத்தில் செவ்விரும்பு (manganese) மைப்பூச்சும் இன்னொரு பக்கத்தில் துத்தநாகம் (zinc) மற்றும் கரிமப் பூச்சும் இடம்பெற்றிருக்கும்.
4x4 சதுர சென்டிமீட்டர் அளவிலான, 0.4 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட தாள் மின்கலத்தைக் கொண்டு ஒரு சிறிய மின்விசிறியைக் குறைந்தது 45 நிமிடங்களுக்குச் சுழல வைக்கலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாள் மின்கலத்தை வளைத்தாலோ முறுக்கினாலோ அதன் மின்விநியோகம் பாதிக்கப்படாது. பெரிய அளவிலான தாள் மின்கலங்களை அச்சிட்டு, பின்னர் அதனை வெவ்வேறு அளவிலும் வடிவத்துடனும் கூடிய சிறுசிறு மின்கலங்களாக வெட்டிப் பயன்படுத்த முடியும்.
இப்போதைக்கு மறுமின்னூட்ட மின்கலங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயனி மின்கலங்களைக் காட்டிலும் இந்தத் தாள் மின்கலங்களின் விலை பத்து மடங்கு குறைவாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
பயன்படுத்தியபின் மண்ணுக்குக் கீழ் போட்டு, ஒரு மாதத்திற்குள் இதனை முழுமையாக மட்கச் செய்ய முடியும் என்பது இம்மின்கலத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
இதுபற்றிக் கருத்துரைத்த என்டியு மின்னியல், மின்னணுப் பொறியியல் துறையின் துணைப் பேராசிரியரும் ஆய்வின் இணைத் தலைவருமான லே சியோக் வூ, "நாங்கள் உருவாக்கியுள்ள இந்தத் தாள் மின்கலம், மின்கழிவுகளைக் குறைக்க உதவும் என்று நம்புகிறோம். இதில் நச்சுப்பொருள் எதுவும் இல்லை. அத்துடன், தாள் மின்கலத்திற்கு அலுமினியம் அல்லது நெகிழி உறையிட வேண்டிய தேவையும் இல்லை," என்று விளக்கினார்.

