மக்கள் செயல் கட்சி மீண்டும் ஒரு திருப்புமுனையில் இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார். தலைமைத்துவ மாற்றத்தையும் புதிய தலைமுறை வாக்காளர்களையும் கட்சி இப்போது எதிர்நோக்குவதாக நேற்று அவர் குறிப்பிட்டார்.
1985ஆம் ஆண்டில் இருந்த சூழலுடன் இப்போதைய நிலையை அவர் ஒப்பிட்டார். 1985ஆம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை தலைவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை திரு லீ நினைவுகூர்ந்தார். இப்போது எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளதை அவர் சுட்டினார்.
புதிய சவால்களை மக்கள் செயல் கட்சியும் அதன் நான்காம் தலைமுறை தலைவர்கள் குழுவும் எவ்வாறு எதிர்கொள்ளும், சிங்கப்பூரை முன்னோக்கி கொண்டு போக நான்காம் தலைமுறை தலைவர்களுக்குப் போதிய ஆற்றல் உள்ளதா போன்றவை அவற்றில் அடங்கும் என்றார் பிரதமர் லீ.
'1985லிருந்து 2021ஆம் ஆண்டு வரை மக்கள் செயல்கட்சியின் வரலாறு' எனும் தலைப்பு கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் நேற்று கலந்துகொண்டு பிரதமர் லீ பேசினார். இந்த நூலை எஸ். ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகத்தின் தேசிய பாதுகாப்புக்கான உன்னத நிலையத்தின் தலைவரும் மூத்த ஆய்வாளருமான டாக்டர் சஷி ஜயகுமார் புனைந்தார். நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
விழாவில் பேசிய திரு லீ, கடந்த 35 ஆண்டுகளைப் போல் இல்லாது அடுத்த 35 ஆண்டுகள் வித்தியாசமாக இருக்கும் என்றார்.
"எதிர்காலத்தைக் கணிப்பது நமது பணியல்ல. ஆனால் நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்குவது நமது பொறுப்பாகும். சிங்கப்பூரின் பாதுகாப்பு, நிலைத்தன்மை, வெற்றி ஆகியவை தொடர்வதை உறுதி செய்யும் தலையாயக் கடமை மக்கள் செயல் கட்சிக்கு உண்டு.
"நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சிங்கப்பூரர்களுடன் அது மிக அணுக்கமாகச் செயல்பட வேண்டும்," என்று மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரதமர் லீ கூறினார். சிங்கப்பூர் இப்போது மூன்றாம் தலைமுறை தலைமைத்துவத்திலிருந்து நான்காம் தலைமைத்துவத்துக்கு மாறும் கட்டத்தில் இருப்பதாகப் பிரதமர் லீ தெரிவித்தார்.
தலைமைத்துவப் பொறுப்பு இரண்டாம் தலைமுறை தலைவர்களுக்கு வழங்கப்பட்டபோது 1984ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவான வாக்குகள் எண்ணிக்கை 12.9% குறைந்து 64.8 விழுக்காடாகப் பதிவானதை திரு லீ நினைவுகூர்ந்தார்.
மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவான வாக்குகள் குறைந்ததற்கு மூத்த தலைமுறையினர் பலரின் இறப்பும் அவர்களைவிட அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்ட புதிய தலைமுறையினர் பலர் வாக்களித்ததும்தான் காரணம் என்று அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ தெரிவித்திருந்தார்.
மக்கள் செயல் கட்சி அதன் அரசியல் ஆதிக்கத்தை இழக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று அன்று பேசப்பட்டதாக பிரதமர் லீ கூறினார். 1984ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட மக்கள் செயல் கட்சியினரில் பிரதமர் லீ மட்டுமே இன்றுவரை அரசியலில் நீடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, அப்போது வாக்களித்த முன்னோடித் தலைமுறையினர் பலர் மரணமடைந்துவிட்டனர்.
"1984ஆம் ஆண்டில் வாக்களித்த வாக்காளர்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள், இலட்சியங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இப்போதைய வாக்காளர்களின் எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் வேறு படுகின்றன," என்றார் திரு லீ.
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்கு அமோக ஆதரவு கிடைத்த போதிலும் அக்கட்சிக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 8.6% குறைந்ததாக அவர் கூறினார். முதல்முறையாக இரண்டு குழுத் தொகுதிகளை எதிர்க்கட்சியினர் கைப்பற்றினர்.
"சிங்கப்பூர் இவ்வளவு காலம் நிலைத்தன்மையுடன், முன்னேற்றம் அடைந்து வெற்றி நடைபோடு வதற்கான காரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ள கட்சியின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள இந்த நூல் சிங்கப்பூரர்களுக்கு உதவியாக இருக்கும். சிங்கப்பூருக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர இந்நூல் அடுத்த தலைமுறையினருக்கும் மக்கள் செயல் கட்சிக்காரர்களுக்கும் உந்து சக்தியாக இருக்கும் என நான் நம்புகிறேன்," என்றார் பிரதமர்.

