கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள உணவங்காடிக் கடைக்காரர்களின் வருமானத்தைப் பெருக்கவும் இணையத்தில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் உதவக்கூடிய ஒரு செயல்திட்டத்தில் அடுத்த ஆண்டு மேலும் ஏழு உணவங்காடி நிலையங்கள் சேர்க்கப்படும். டிபிஎஸ் வங்கி நேற்று இதனை அறிவித்தது.
'உணவங்காடி நிலையம் தத்தெடுப்பு' என்ற அந்த வங்கியின் செயல்திட்டத்தின்கீழ் இப்போது மூன்று உணவங்காடி நிலையங்கள் பலனடைகின்றன.
அந்தச் செயல்திட்டம் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி தஞ்சோங் பகார் பிளாசா சந்தை, உணவு நிலையத்தில் தொடங்கியது.
பிறகு அந்தத் திட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் சைனாடவுன் காம்பிளக்ஸ், எண் 58 நியூ அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள 'தி மார்க்கெட் பிளேஸ்' ஆகிய நிலையங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
தத்தெடுப்புத் திட்டத்தின்கீழ் இந்த வங்கி ஒட்டுமொத்தமாக அந்தக் கடைகளில் இருந்து உணவுவகைகளை வாங்கி விநியோகிக்கும். தி மார்க்கெட் பிளேஸ் நிலையத்தில் நடந்த ஒரு சமூக நிகழ்ச்சியில், செயல்திட்டம் விரிவடைவது பற்றி நேற்று அறிவிக்கப்பட்டது.
அப்போது எட்டு உணவங்காடிக் கடைகளில் இருந்து 500 உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டு, அவை பக்கத்தில் உள்ள சாங்கி பொது மருத்துவமனையில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

