தீவிரவாத மனப்போக்கைத் தாங்களாகவே வளர்த்துக்கொண்ட இரண்டு சிங்கப்பூரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
நல்ல நடத்தையுடன் அவர்கள் காணப்பட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு (ஐஎஸ்டி) நேற்று தெரிவித்தது.
முகம்மது ஷாமின் முகம்மது சித்திக், 35, முகம்மது உமர் மகாடி, 38, என்ற அந்த இருவரும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டிய அளவுக்கு பாதுகாப்பு மிரட்டலாக இப்போது இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் இந்தத் துறை குறிப்பிட்டது.
ஷாமின் 2015 மே மாதம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்குத் திட்டுமிட்டு இருந்தார் என்பது இந்தத் துறையின் புலன்விசாரணை மூலம் தெரியவந்தது.
அவர் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டு உத்தரவின்கீழ், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் விடுதலை செய்யப்பட்டதாக ஐஎஸ்டி தெரிவித்தது.
முகம்மது உமர், 2016 ஆகஸ்ட்டில் தடுத்துவைக்கப்பட்டார்.
முகம்மது உமரும் அவருடைய மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து போராட திட்டமிட்டு இருந்தனர்.
தடுப்புக் காவல் நிறுத்திவைப்பு உத்தரவின்கீழ், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் உமர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
இதனிடையே, இதர ஆறு சிங்கப்பூரர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் ஜூன் முதல் நவம்பர் வரைப்பட்ட காலத்துடன் அது முடிவுக்கு வருமாறு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.