தன்னுடைய தயாரிப்புப் பொருளான தேன், கொவிட்-19 நோயைக் குணப்படுத்தவல்லது எனக் கூறிக்கொள்ளும் தேன் விற்பனையார்மீது சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த தேனை விற்பனை செய்யும் 'நேச்சரல் வைல்ட் ஹனி' நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் 12 போத்தல்கள் தேனை உட்கொள்ளும் கொவிட்-19 நோயாளி ஒருவர், 18 நாள்களில் அந்நோயில் இருந்து குணமடைய முடியும் எனக் கூறி வந்துள்ளது.
தன்னுடைய பொருளை வாங்குவோருக்கு உத்தரவாதமும் அந்நிறுவனம் அளித்துள்ளது.
கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடையவில்லை என்றால் 12 போத்தல் தேனுக்கும் உரிய $800 தொகையைத் திருப்பிக் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்குப் பதிலளித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, அந்த நிறுவனம் விளம்பரப்படுத்துவது பற்றி தனக்குத் தெரியும் என்றும் இதன் தொடர்பில் அது விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியது.
இதனிடையே, அந்த நிறுவனத்தின் இயக்குநரான ரிச்சர்ட் டியோ, 70, தனது நிறுவனம் விளம்பரப்படுத்துவது உண்மை என்று தெரிவித்தார்.
"நான் மக்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். இப்படி விளம்பரப்படுத்தக்கூடாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறுவது நியாயமான ஒன்றல்ல. அந்த அமைப்பு எனது தேனை கொவிட்-19 நோயாளிகளிடம் முதலில் பரிசோதித்துப் பார்க்கவேண்டும்," என்று திரு ரிச்சர்ட் டியோ கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.


