சிங்கப்பூர், தென்கொரியா இரண்டும் செய்துகொள்ள உள்ள புதிய ஒப்பந்தப்படி, இரு நாடுகளுக்கும் இடையே மின்னிலக்க வர்த்தகம், பங்காளித்துவ உறவு ஆகியவற்றின் தொடர்பில் விதிமுறைகளும் தரநிலைகளும் வகுக்கப்படவுள்ளன.
நேற்று நடந்த சந்திப்புக்குப்பின் தென்கொரியாவின் வர்த்தக அமைச்சர் இயோ ஹன்-கூ மற்றும் சிங்கப்பூரின் வர்த்தக தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் இது குறித்து அறிவித்தனர்.
இந்த 'கொரியா-சிங்கப்பூர் மின்னிலக்க பங்காளித்துவ ஒப்பந்தம்' சிங்கப்பூர் செய்துகொள்ளும் நான்காவது மின்னிலக்கப் பொருளியல் ஒப்பந்தமாகும். ஓர் ஆசிய நாட்டுடன் இந்த ஒப்பந்தத்தைச் செய்வது இதுவே முதல் முறையாகும்.
தகவல், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும் மின்னிலக்க உள்கட்டமைப்பைப் புதிய விதிமுறைகளும் தரநிலைகளும் ஏற்படுத்தித் தரும். வர்த்தகங்களுக்கும் பயனாளர்களுக்கும் நம்பிக்கையான, பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலையும் இவை அளிக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சு விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டது.
இணைய வர்த்தகத் தளங்களான 'ஷாப்பி', 'லஸாடா' ஆகியவற்றில் தென்கொரிய பொருள்களை சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் மேலும் எளிதாக எட்டுவதற்குப் புதிய ஒப்பந்தம் வழிவகுக்கும் என்றார் திரு இயோ.
"வர்த்தகம், முதலீடு என வரும்போது தென்கொரியாவும் சிங்கப்பூரும் ஒரே சிந்தனையுடைய பங்காளிகள் ஆவர். மின்னிலக்க வர்த்தக விதிமுறைகள் தொடர்பில் நம் பங்காளித்துவத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுவாக்குகிறது," என்றார் அவர்.
ஆசியானின் மையப் பகுதியில் இருப்பதுடன் முன்னணி மின்னிலக்க மையமாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. இதனால் புதிய ஒப்பந்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு தென்கொரிய நிறுவனங்களால் வட்டாரத்தின் மின்னிலக்கத் துறைக்கு விரிவுபடுத்திக்கொள்ள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தென்கொரியாவுக்கு எட்டாவது ஆகப் பெரிய வர்த்தக பங்காளியாக சிங்கப்பூர் இருந்தது என்று வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்தது.

