செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7a6b9ae3-3ca9-479d-b7c7-08a9cc38ace7
-

விதிமீறல்: 22 உணவு, பான கடைகளை மூட உத்தரவு

கொவிட்-19 பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதன் தொடர்பில் டிசம்பர் மாதத்தில் இதுவரை 22 உணவு, பான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை மீறல், இரு வேறு வாடிக்கையாளர் குழுக்களின் இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உறவாடலைக் குறைக்கத் தவறியது போன்ற விதிமீறல்கள் இந்தக் கடைகளில் நிகழ்ந்திருந்தன.

வேறு 11 உணவு, பான கடைகளுக்கும் 31 பேருக்கு பல்வேறு கொவிட்-19 விதிமீறலுக்காக அபராதமும் விதிக்கப்பட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று தெரிவித்தது. பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் காற்பந்து விளையாடிய 22 பேர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

படம்: எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்

'ஒவ்வொரு கொவிட்-19 அலையுடன்

நம் மீள்திறன் அதிகரிக்க வேண்டும்'

கொவிட்-19 கிருமி அலை அடுத்தடுத்து வந்து தாக்கும்போது, சிங்கப்பூர் அதை எதிர்கொண்டு மேலும் அதிக மீள்திறனுடன் விளங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கிருமி முறியடிப்பு காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவருவது ஆகாது என்றார் அவர்.

"படிப்படியாக நம் வர்த்தகங்களைத் திறப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். மற்றொரு கிருமி அலை வருவதையும் புதிய கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகுவதையும் நாம் உணரும்போது, மீண்டும் பழையபடி கடுமையான, துன்பம் தரும் கட்டுப்பாடுகள் இருந்த நிலைக்கு நாம் திரும்பத் தேவையில்லை," என்றார் அவர். எனினும் இத்தகைய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இறுதிக் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.