கொவிட்-19 காரணத்தால் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதையடுத்து, 2020ஆம் ஆண்டின் பட்டதாரிகளுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நேரடி நிகழ்வாக நடைபெற்றது.
ஆறு நாள்களுக்கு நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,921 எஸ்எம்யு மாணவர்கள் தங்களின் பட்டத்தைப் பெறுவர்.
2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த இவர்களின் பட்டமளிப்பு விழா, கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்த காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கலந்துகொண்டார்.
"வாழ்க்கை அளிக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். வாழ்க்கைத்தொழில், குடும்பம் என உங்கள் வாழ்க்கையில் இன்னும் பலவற்றை நீங்கள் தொடங்க உள்ளீர்கள்," என்றார் அவர்.
வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு பட்டதாரிகளுக்கு எஸ்எம்யு தலைவர் ஹோ குவொன் பிங்கின் தம் உரையில் அறிவுறுத்தினார்.

