கடும் சுவாச நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த நிலையிலும் மருத்துவ விடுப்பு தரப்பட்ட 20 வயது டான் ஃபு யு, பச்சை குத்திக்கொள்ள வெளியே சென்றார். அத்துடன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றபின், கொவிட்-19 பரிசோதனைக்கும் அவர் செல்லவில்லை.
இதையடுத்து, டான் நன்னடத்தைக் கண்காணிப்புக்குத் தகுதிபெறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு நேற்று அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
வறட்டு இருமல், தொண்டை நமைச்சல் ஆகிய அறிகுறிகளுக்காக சிகிச்சை பெற, அங் மோ கியோ பலதுறை மருந்தகத்திற்கு டான் சென்றிருந்தார்.
அவருக்குக் கடும் சுவாச நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளன என்றும் கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதிசெய்ய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் கூறியிருந்தார்.
டானுக்கு மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பும் தரப்பட்டது.
சட்டப்படி பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரை, டான் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவ விடுப்பு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவரின் விளக்கத்தைக் கேட்டறிந்ததாக டான் கூறிவிட்டு, மருத்துவ விடுப்புச் சீட்டைப் பெற்றுக்கொண்டு அறையிலிருந்து சென்றுவிட்டார்.
இருப்பினும், பரிசோதனைக்குச் செல்லாமல் டான் தனது வீட்டுக்குப் பேருந்தில் சென்றார். டானின் கைபேசியில் மருந்தகத் தாதி பலமுறை தொடர்புகொள்ள முயற்சியும் செய்திருந்தார்.
மறுநாள், டான் தனியார் வாடகை வாகனத்தில் பச்சை குத்தும் இடம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து பேருந்தில் மீண்டும் வீடு திரும்பினார்.
தண்டனை விதிப்புக்காக டான் மீண்டும் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார்.

