கொவிட்-19 தொற்றுக்குப் பிந்தைய புதிய பொருளியலில் நிறுவனங்களுக்கு உதவ சம்பள ஆதரவுத் திட்டமும் தற்காலிக கடன் ஏற்பாடுகளும் 2022 வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை மையமாக வைத்து அந்தக் கூட்டமைப்பு 16 பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது.
நிறுவனங்கள், உள்நாட்டு, வட்டார, உலக வளர்ச்சி வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள உதவுவதே அந்தப் பரிந்துரைகளின் ஒட்டுமொத்த நோக்கம் என்று கூட்டமைப்பு கூறியது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ள தொழில்துறைகளுக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் கிடைக்கக்கூடிய 25 விழுக்காட்டு சம்பள உதவி, நிறுவனங்கள் மீட்சிக்கு ஆயத்தமாக உதவும் வகையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று அது கோரியுள்ளது.
இந்தத் துறைகளில் உணவு, பான தொழில்துறை, சில்லறை வர்த்தகம், உடலுறுதி, மேடை கலை, கல்வி, சுற்றுலா, அரும்பொருளகம், கலைக்கூடம், வரலாற்று இடங்கள், குடும்ப பொழுதுபோக்கு ஆகிய தொழில்துறைகள் அடங்கும்.
வேலை ஆதரவுத் திட்டம் நவம்பர் 22 முதல் 10 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. டிசம்பர் 19ஆம் தேதி வாக்கில் அது முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் செலவுகளை நிறுவனங்கள் சமாளிக்க உதவும் நோக்கத்தில் 2023 மார்ச் 31 வரை தற்காலிக கடன் ஏற்பாட்டுத் திட்டங்கள் நீட்டிக்கப்பட வேண்டும்.
அதோடு, ஒப்பந்தங்களுக்கான இடைநிறுத்தமும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று அது குரல் கொடுத்து உள்ளது.
கொவிட்-19 ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளுக்கு மானியம் தேவை. வெளிநாட்டு ஊழியர்களை இங்கு கொண்டுவர ஆகும் செலவை ஈடுசெய்ய அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரி உள்ளது.
கொவிட்-19 காரணமாக சவால்கள் தொடர்ந்த போதிலும் அடுத்த ஆண்டில் மீட்சியும் வளர்ச்சியும் ஏற்படும் என்று இப்போது நிறுவனங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி லாம் யி யோங் தெரி வித்தார்.
நிறுவனங்கள் இப்போதைய சவால்களில் இருந்து மீண்டுவரவும் எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும் வகையில் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
2022 வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற சிங்கப்பூர் தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரை

