சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், வடகிழக்குப் பருவ காலத்தின்போது கடலில் மேலும் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளை நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் பருவ காலம் டிசம்பர் முற்பாதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் படகுகள், துறைமுகக் கலன்கள், உல்லாசக் கலன்கள் பலவற்றிலும் திடீர் திடீரென மேலும் அதிக சோதனைகள் இடம்பெறும் என்று ஆணையம் தெரிவித்தது.
வழக்கமான சோதனைகளுடன் பயணிகள் பாதுகாப்பான முறையில் புறப்படுவதையும் பாதுகாப்பான முறையில் வருவதையும் உறுதிப்படுத்துவதில் சோதனைகள் ஒருமித்த கவனம் செலுத்தும்.
படகுகளிலும் கலன்களிலும் தீயணைப்பு, முதலுதவி, உயிர்காப்புச் சாதனங்கள் நன்கு செயல்படும் முறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் அவசரகால நடவடிக்கைகள் பற்றி கலன்களின் ஊழியர்கள் அறிந்திருப்பதை உறுதி செய்யவும் பரிசோதனைகள் நடத்தப்படும்.
உரிமம் தொடர்பான ஆணையத்தின் விதிமுறைகள் மீறப்படவில்லை என்பதையும் அந்தப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவநிலை காரணமாக மிதமானது முதல் இடியுடன் கனமழை பெய்யும். வலுவான காற்றும் அடிக்கும். கடல் அலை ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்.
அதனால் கடலில் செல்வோருக்கு ஆபத்து அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆண்டு முடிவு விழாக் காலம் நெருங்குகிறது. சிங்கப்பூர் தன்னுடைய எல்லைகளை கட்டம் கட்டமாக மீண்டும் திறந்துவிடுகிறது.
இத்தகைய ஒரு சூழலுடன் சேர்ந்து பருவநிலை இடம்பெற இருப்பதையும் ஆணையம் சுட்டிக்காட்டியது.
தென் தீவுகளுக்குச் சுற்றுலா செல்லவும் ஓய்வுகால நடவடிக்கைகளுக்காகவும் உள்ளூர் படகுகளும், உல்லாசக் கலன்களும் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு கடலில் சோதனைகள் அதிகரிக்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

