உள்ளூர் பொறியியல் நிறுவனம், முழங்கால் அறுவைசிகிச்சை வல்லுநர்கள், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக முப்பரிமாண அச்சுத்துறை வல்லுநர்கள் சேர்ந்து இலேசான, வசதியான, ஆற்றல் மிக்க முழங்கால் வலுக்காப்புச் சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படக்கூடிய சுமையைப் போக்க முதியோருக்கு அந்தச் சாதனம் பரிந்துரைக்கப்படுகிறது.
முழங்கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருப்போருக்கு அத்தகைய சாதனம் பெரும் உதவியாக இருக்கும்.
வழக்கமான முழங்கால் வலுக்காப்புச் சாதனம் ஏறத்தாழ 1 கிலோஎடை இருக்கும். அது, குறிப்பிட்ட கோணத்திற்கு மேல் முழங்காலை அசைக்க முடியாதபடி தடுக்கும்.
ஆனால் இப்போது உருவாக்கப்பட்டு உள்ள 'எக்ஸ்-பிரேஸ்' என்ற முழங்கால் வலுக்காப்புச் சாதனம் இலேசானதாக, காலை நீட்டி மடக்குவதில் பெரும் உதவி யாக இருக்கும். குறிப்பாக எழுந்து நிற்பதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு, மாடிப்படியில் ஏற சிரமப்படுவோருக்கு இது பெரிதும் உதவும் என்று எலும்பியல் நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெஃப்ரி சியூ தெரிவித்தார்.
அந்தச் சாதனம் விரைவில் சந்தைக்கு வரும். அது $1,000 விலை இருக்கும் என்று தெரிகிறது.

