செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
efa53c75-55a4-48c6-a23b-20bebca67d6f
-

13 பையன்களை மானபங்கம் செய்ததாகக் குற்றச்சாட்டு

ஆசிரியர் ஒருவர், ஒரு பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல இடங்களில், மூன்று ஆண்டு காலத்தில் 13 பையன்களை மானபங்கம் செய்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையில் அந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பையன்களுக்கு வயது 13 முதல் 15 வரை. சிங்கப்பூரரான அந்த ஆடவர் மீது செல்வாய்க்கிழமை 25 மானபங்கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றோடு, சிறார், இளையர் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளையும் அலைக்கழிப்பு குற்றச்சாட்டு ஒன்றையும் அவர் எதிர்நோக்கினார்.

இந்த வழக்கில் தொடர்புடையோரின் விவரங்களை வெளியிட இயலாது. ஆடவருக்கு $10,000 பிணை அனுமதிக்கப்பட்டது. வழக்கு ஜனவரி 11ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

சில்வியா: ரயீசா கான் விவகாரத்தை பிரித்தம் சிங்கிடம் விட்டுவிட்டேன்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது பற்றி சில மாதங்களாகவே அந்தக் கட்சியின் தலைவியான சில்வியா லிம்முக்குத் தெரியும். ஆனால் அந்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்கான கால ஏற்பாடு பற்றி அவர் சக கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கவில்லை.

அந்தப் பிரச்சினையைக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கையாளட்டும் என்று சில்வியா லிம் விட்டுவிட்டார்.

இந்த விவரங்களை நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணையில் சில்வியா லிம் தெரிவித்துள்ளார்.

திருவாட்டி கானைப் பற்றி திரு பிரித்தம் சிங் நன்கு அறிவார். அவருக்குத் திரு பிரித்தம் சிங் தான் வழிகாட்டு கிறார் என்பதால் அவரே இந்த விவகாரத்தைக் கையாளட்டும் என்று தான் விட்டுவிட்டதாக சில்வியா லிம் சாட்சியம் அளித்தார்.

திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது குறித்து நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்தக் குழு தனது நான்காவது சிறப்பு அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் மறுபடியும் பொய் சொன்னதற்கு அடுத்த நாள்-அதாவது அக்டோபர் 5ஆம் தேதியை, அவர் மன்றத்தில் உண்மையை ஒப்புக் கொள்வதற்கான ஒரு விருப்ப உரிமையாகத் தான் கருதவில்லை என்றும் திருவாட்டி சில்வியா சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாட்டி கானுக்குத் தோதான ஓர் அறிக்கையை கவனமாக வடிவமைக்க பாட்டாளிக் கட்சித் தலைவர்களுக்கும் திருவாட்டி கானுக்கும் காலஅவகாசம் தேவைப்பட்டதே அதற்கான காரணம் என்றும் திருவாட்டி சில்வியா தெரிவித்துள்ளார்.

இணைப் பேராசிரியர் சாட்சியம்

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ரயீசா கான் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது பற்றி ஆகஸ்ட் 8 முதல் பாட்டாளிக் கட்சியின் மூன்று தலைவர்களுக்குத் தெரியும்.

அது, பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என்று அவர்கள் திருவாட்டி கானிடம் கூறி இருப்பார்களே யானால் கட்சியின் உயரிய அமைப்பு நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்படக்கூடிய முக்கிய அம்சமாக இருந்திருக்கும் என்று மத்திய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் ஜேமஸ் லிம் நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் தெரிவித்தார்.

ஆனால் கொஞ்ச காலஅவகாசத்தைத் தொடர்ந்து உண்மையை கூறிவிடும்படி திருவாட்டி கானிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில், கட்சித் தலைவர்களிடம் அவர் ஏற்கெனவே பொய் கூறியதாக ஒப்புக்கொண்டு இருந்தது பாட்டாளிக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முக்கிய தகவல்களாக இருந்திருக்காது என்றார் அவர்.