அலெக்சாண்டிரா வட்டாரத்தில், அதுவும் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பத்து நிமிடத்துக்கும் குறைவான தூரத்தில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீட்டுத் திட்டத்தின்கீழ் 1,500 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. அதற்கான திட்டங்களை வரைந்து வருவதாகவும் உரிய நேரத்தில் அவை அறிவிக்கப்படும் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்துள்ளது.
அலெக்சாண்டிரா ரோடு, பிரின்ஸ் சார்ல்ஸ் கிரசென்ட், அலெக்சாண்டிரா கால்வாய் ஆகியவற்றுக்கு இடையிலான நிலத்தில் புதிய வீடுகள் கட்டப்படும்.
ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 400 மீட்டர் தூரத்தில் அந்த இடம் உள்ளது.
முன்னதாக தாழ்வான அடுக்குமாடி அரசாங்க வாடகை வீடுகள், கடைகள், சந்தை ஆகியவை அந்த இடத்தில் இருந்தன. 1990களில் அந்தக் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
பொது வீடமைப்பு வீடுகளுக்கான வலுவான தேவையை நிறைவு செய்ய அந்த இடம் மேம்படுத்தப்படும் என்று வீவகவும் சிங்கப்பூர் நில ஆணையமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறின.
நகர மறுசீரமைப்பு ஆணையம் 1998இல் வெளியிட்ட பெருந்திட்டத்தில் அந்த இடம் குடியிருப்புக் கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்டது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின் (பிஎச்எல்) கீழ் இந்த வீடுகள் இடம்பெறுமா என்று வீவகவிடம் கேட்கப்பட்டது.
"முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் அமையவுள்ள புதிய வீட்டுத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் அறிவிக்கப்படவுள்ள வீடுகள் பற்றி பிடிஓ அறிவிப்புக்கு முன்னதாக தெரிவிக்கப்படும்," என்று வீவக கூறியது.
மத்திய, முதன்மை வட்டாரங்களில் எதிர்கால வீவக வீடுகள் கட்டுப்படியான விலையில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக அமைவது முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்கீழ் வீட்டு உரிமையாளர்கள், 10 ஆண்டுகால குறைந்தபட்ச குடியிருப்புக் காலம், வீட்டு மறுவிற்பனையின்போது அரசாங்க மானியம் மீட்டுக்கொள்ளப்படுதல் போன்ற கடுமையான கொள்முதல், விற்பனை நிபந்தனைகளுக்கு உட்படுவர்.
அத்துடன், அலெக்சாண்டிரா வட்டார மேம்பாட்டுக்கு ஏதுவாக அலெக்சாண்டிரா அஞ்சல் நிலையம், சிங்ஃபோஸ்ட் அமைந்துள்ள 0.23 ஹெக்டர் நிலம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

