எல்லைக் கட்டுப்பாடுகள், வளர்ச்சித் துறைகளில் காணப்படும் மனிதவள தேவை இரண்டும் சேர்ந்து சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையை என்றுமில்லா அளவுக்கு 98,700ஆக உயர்த்தியுள்ளது.
இதை நேற்றுத் தெரிவித்த மனிதவள அமைச்சு, ஜூன் மாதத்தில் இருந்த 92,100 வேலைவாய்ப்பு எண்ணிகையுடன் ஒப்பிட இது பெரும் அதிகரிப்பு என்று தெரிவித்துள்ளது.
வேலையின்றி இருக்கும் ஒவ்வொரு 100 ஊழியர்களுக்கும் 209 வேலைவாய்ப்புகள் காத்திருந்தன என்றும் அமைச்சு விளக்கியது.
இதுவே கடந்த ஜூன் மாதம், ஒவ்வொரு 100 வேலையில்லா ஊழியர்களுக்கும் 163 வேலைவாய்ப்புகள் காத்திருந்ததாக அமைச்சு கூறுகிறது.
இத்துடன், வேலைவாய்ப்பு அதிகரிப்பு தற்பொழுது சற்று மெதுவடைந்திருந்தாலும், தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளுக்கு அதிகரித்து வந்துள்ளது கவனிக்கத்தக்கது.
எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர் வருகை குறைந்ததால், உள்ளூரில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர்த்து பார்த்தால், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின் வேலையின்றி இருக்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 173,100 வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒர்க் பெர்மிட் ஊழியர்கள், குறிப்பாக, உற்பத்தி, கட்டுமானம், உணவு -பானத் துறை, நிர்வாகம், அதற்கு ஆதரவு சேவை வழங்கும் துறை களில் வேலையின்மை காணப் பட்டதாக அமைச்சு விளக்கியது.
இந்தத் துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் மொத்த வேலைவாய்ப்புகளில் 38% என்பது குறிப்பிடத்தக்கது.
"வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும், வேலையில்லாதோருக்கான வேலை காலி இடங்களின் விகிதமும் எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை அதிகமாகவே இருக்கும்," என்று அமைச்சு தனது மூன்றாம் காலாண்டு ஊழியர் சந்தை அறிக்கையில் தெரிவிக்கிறது.
மேலும், நிபுணத்துவ சேவை, தகவல்-தொடர்பு, சுகாதாரம், சமூக சேவைகள் போன்ற வளர்ச்சி கண்டுவரும் துறைகளில் நீடித்த ஊழியர் தேவை இருந்ததாகவும் அதற்கேற்றாற்போல், இந்தத் துறைகளில் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் வேலைவாய்ப்புகள் பெறுவதும் அதிகரித்ததாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

