புதிய உருமாறிய கொவிட்-19 கிருமியானா 'ஓமிக்ரான்' பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, சில நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரித்தபோதிலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கடந்த மாதம் தொடர்ந்து உயர்ந்தன.
சொத்துச் சந்தை இணைய வாசல்களான, 99.co, SRX ஆகியவை நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, வீவக, கொண்டோமினியம் வீடுகள் ஆகிய இரண்டின் வாடகையும் குத்தகைக்கு விடப்படும் எண்ணிக்கையும் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் அதிகரித்தது.
மத்திய வட்டாரம், நகரோரப் பகுதிகள், புறநகர்ப் பகுதிகள் முழுவதும் விலை அதிகரித்திருந்ததுடன், கடந்த மாதம் கொண்டோமினிய வீடுகளுக்கான மாதாந்திர வாடகையும் 1.1% கூடியுள்ளது.
ஆண்டு அடிப்படையில் கொண்டோமினிய வாடகை கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிட 10% கூடியுள்ளது. கொண்டோமினிய வாடகை 1.7% அதிகரித்து 4,696 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அக்டோபரில் 4,612 ஆக இருந்தது. வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகள் அதிகமாக புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. இது மொத்த வாடகை அளவில் 39.6 விழுக்காடாகும்.
ஓமிக்ரான் பரவலால் சில நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய போதிலும், பல்வேறு நாடுகளுடன் அதிகரித்த ஒட்டுமொத்த இணைப்பு தொடர்ந்து வாடகை சந்தைக்கு பயனளிக்கிறது என்று சொத்துச் சந்தை நிறுவனமான ஆரஞ்ச் டீ அண்ட் டையின் ஆய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திருமதி கிறிஸ்டின் சன் குறிப்பிட்டார். வாடகை வீடுகளுக்கான தேவை சந்தையில் இருப்பதை விட அதிகமாக உள்ளது என்றார் அவர்.
வீவக அடுக்குமாடி வீடுகளுக்கான வாடகை அனைத்து குடியிருப்புப் பேட்டைகளிலும் 17வது மாதமாக தொடர்ந்து ஏற்றம் கண்டது. அது கடந்த மாதம் 0.8 விழுக்காடு உயர்ந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், வீவக வாடகை 9.2% அதிகமாகும்.
செப்டம்பரின் 1,746 வீடுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் அதிகமான வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன, இது 2.6 விழுக்காடு அதிகரித்து 1,792 வீடுகளாக இருந்தது.
அடுத்த 12 மாதங்களில் வீவக, தனியார் வீட்டு வாடகை சுமார் 8% முதல் 11% வரை வேகமாக அதிகரிக்கும் என ஆரஞ்ச் டீ நிறுவனத்தின் திருமதி சன் கணிக்கிறார்.

