இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வில் (பிஎஸ்எல்இ) தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான உயர்நிலைப் பள்ளித் தெரிவின் முடிவுகள் வரும் 22ஆம் தேதி வெளிவரும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவரின் தொடக்கப்பள்ளி, குறுஞ்செய்தி, எஸ்1 இணையக் கட்டமைப்பு ஆகியவை வழியாக மாணவர்கள் முடிவுகளைப் பெற லாம். முடிவைப் பெற்றதும் மாணவர் மறுநாள் புதிய பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.
தங்களது புதிய பள்ளிகளின் இணையத்தளங்களுக்குச் சென்று பாடப் புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்குவது குறித்த தகவல்களை 22ஆம் தேதி முதல் தெரிந்துகொள்ளலாம்.
பெற்றோர் 'பேரன்ஸ் கேட்வே' இணையத்தளம் வாயிலாக புதிய பள்ளிகளிடமிருந்து சில தகவல்களையும் பெறலாம்.
ஏற்கக்கூடிய காரணங்களால் ஜனவரி 4ஆம் தேதியன்று உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் பள்ளிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு அந்தப் பள்ளிகளில் தங்களது இடம் உள்ளதை உறுதி செய்யலாம். அவர்களுக்கான இடத்தைப் பள்ளிகள் தக்கவைக்கும் என்று கல்வி அமைச்சு கூறியது. மேல் விவரங்களை கல்வியமைச்சின் இணையத்தளத்தில் காணலாம்.