நாடுகளுக்கிடையே இயங்கி வரும் பங்குச் சந்தை மோசடிக் கும்பல் ஒன்றை முடக்குவதற்காக முதல்முறையாக சிங்கப்பூர், ஹாங்காங்கைச் சேர்ந்த பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் இணைந்துள்ளனர்.
ஹாங்காங் பங்குச் சந்தை தொடர்பில் அந்தக் கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பங்குகளை வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட சில நிறுவனங்களைப் பற்றி பொய்ச் செய்திகளைக் கும்பல் பரப்புவதுடன் அதன் பங்கு விலையையும் செயற்கையாக அதிகரிக்கச் செய்கிறது.
சமூக ஊடகங்கள், செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் பொய்ச் செய்திகள் பரப்பப்படுகின்றன. மோசடியில் சிக்குவோர், மிக அதிகமான விலையில் பங்குகளை வாங்குவர்.
அந்த அதிகரித்த விலை போதுமானது என்று மோசடிக் கும்பல் கருதினால், பங்குகளை அது கைவிட்டுவிடும். மோசடிக்கு ஆளான அதே நபர்களிடம் கும்பல் அந்தப் பங்குகளை விற்கும். சரிந்த மதிப்புடைய பங்குகளே அந்த நபர்களுக்கு எஞ்சும். இதனால் அவர்களுக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டாலும் கும்பல் உறுப்பினர்களுக்கு லாபமே.
கும்பலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாது ஒருவர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் $4.4 மி. ரொக்கமும் கடப்பிதழும் அந்த மாதிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

