வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு
களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அடுத்த ஆண்டிலும் அதற்கு அடுத்த ஆண்டிலும் தலா 23,000 வரை தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் (பீடிஓ) வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் நேற்று தெரிவித்தது.
விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகளின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்திருப்பதை இது காட்டுவதாகக் கழகம் கூறியது
கடந்த ஆண்டு 17,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதை அது சுட்டியது.
புக்கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட், காலாங் வாம்போ, குவீன்ஸ்டவுன், தெங்கா, தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும் பிடிஓ வீடு
களுக்காக அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்யலாம்.
இவ்வாண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை 100,000 வீடுகளை விற்பனைக்கு விட வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக இருக்கும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
தேவைக்கு ஏற்ப வீடுகள் கட்டப்படும் என்றார் அவர்.
பிடிஓ விடுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாக அமைச்சர் லீ கூறினார்.
2019ஆம் ஆண்டில் ஒரு பிடிஓ வீட்டுக்கு 3.7 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இது இந்த ஆண்டு 5.5ஆக உயர்ந்துள்ளது.
கூடுதல் வீடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விற்பனைக்கு விட்டபோதிலும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2019ஆம் ஆண்டில் ஏறத்தாழ 14,600 வீடுகளை விற்பனைக்கு விட்டது.
கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் தலா கிட்டத்தட்ட 17,000 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன.
1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும் பிறந்த பலர் தற்போது புதிதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளதால் அவர்களுக்கு வீடு தேவைப்படுகிறது.
இதனால் வீவக வீடுகளுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளதாக திரு லீ தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, சிறு குடும்பங்களாக வாழ பலர் விரும்புவதாலும் கூடுதல் வீடுகள் தேவைப்
படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க நில விற்பனைத் திட்டம் மூலம் தனியார் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று திரு லீ தெரிவித்தார்.
அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 2,800 வீடுகள் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் இருக்கும். இது இவ்வாண்டின் பிற்பாதியில் இடம்பெறும் வீடுகளின் எண்ணிக்கையைவிட 40 விழுக்காடு அதிகம். தேவை அதிகரித்தால் தனியார் வீடுகளுக்குக் கூடுதல் நிலம் ஒதுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றார் திரு லீ.