கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்கவும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவும் உள்ளூர் வர்த்தகங்கள் தயாராகி வருகின்றன. தடுப்பூசி தொடர்பில் வேறுபடுத்தப்பட்ட பாதுகாப்புநிர்வாக நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடக்க கூடுதல் மனிதவளம் தேவைப்படுவதாக சில வர்த்தகங்கள் தெரிவித்தன. இந்தக் கூடுதல் செலவு கடந்த சில மாதங்களாகப் புதிய வழக்கமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து மேலும் பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் வர்த்தகங்களுக்குச் செலவு அடிப்படையில் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
புதிய விதிமுறைகள் நடை
முறைப்படுத்தப்படும்போது சில இடங்களுக்குச் செல்ல வாடிக்கையாளர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 'மைஸ்' எனப்படும் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் துறை புதிய கட்டுப்பாடுகளால் ஆக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இரண்டு ஆண்டுகால மந்தநிலைக்குப் பிறகு கடந்த மாதத்திலும் இம்மாதத்திலும் பெருமளவிலான பல நிகழ்வுகளை அது நடத்தி வருகிறது.
"புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கூடுதல் ஊழியர்களை நியமிக்க, அவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்படும் கூடுதல் செலவு வர்த்தகத்தின் இயக்கத்தைப் பாதிக்கும். இயக்கப் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டியிருந்தது," என்று மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நிர்வாகச் சேவையின் நிர்வாக இயக்குநர் திரு எட்வர்ட் லியூ கூறினார். இந்த நிறுவனம் மூன்று வாரங்களில் மூன்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கூடுதல் செலவுகளில் பெரும் பகுதி கூடுதல் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது, வருகையாளர்கள் வந்து சென்ற பிறகு மாநாடு நடைபெற்ற இடங்களைச் சுத்தம் செய்தது, வருகையாளர்களைக் குழுக்களாகப் பிரிக்க அவர்களுக்கு வெவ்வேறு அடையாளப் பட்டைகளைக் கொடுத்தது, தடுப்புகளைப் பொருத்தியது ஆகியவற்றால் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

