சமூக அளவில் மேலும் ஒரு சிங்கப்பூரருக்கு ஓமிக்ரான் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட பரிசோதனைதெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர் சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் பணிபுரியும் ஊழியர். பயணிகளுடன் அவர் தொடர்பில் இருக்கவில்லை என்று அமைச்சு கூறியது.
அந்த 42 வயது ஆடவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாதம் 8ஆம் தேதியன்று அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.
தனியார் மருத்துவரை அவர் நாடி, பரிசோதனை செய்துகொண்டதை அடுத்து, அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே குணமடையும் திட்டத்தில் வைக்கப்பட்டார்.
அதன் பிறகு, ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் தெரிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட ஆடவருக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தற்போது தேசிய தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை சிங்கப்பூரில் 24 பேருக்கு ஓமிக்ரான் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். எஞ்சிய மூவருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"ஓமிக்ரான் கிருமி வகை மிக வேகமாகப் பரவக்கூடியது. அது பல நாடுகளுக்குப் பரவி உள்ளது. எனவே, நமது எல்லைகளிலும் சமூக அளவிலும் மேலும் பலர் ஓம்கிரான் கிருமி வகையால் பாதிப்படையக்கூடும்," என்று சுகாதார அமைச்சு கூறியது.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 355 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்நோய் காரணமாக மேலும் இருவர் மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இதுவரை 808 பேர் கொவிட்-19 காரணமாக மாண்டுவிட்டனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 274,972ஆக அதி
கரித்துள்ளது.

