வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டத்தின் மூலம் இனி வாடகை வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்கள், உடன் குடியிருக்க ஒருவரைத் தாங்களே தேடிக்கொள்ளத் தேவை இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள ஒற்றையர் கூட்டுத் திட்டத்தின் கீழ், உறவினர் அல்லது நண்பர் எனத் தங்களுக்குத் தெரிந்த ஒருவருடன்தான் ஒற்றையர்கள் இணைந்து வீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும்.
முன்னோடித் திட்டப்படி, வீட்டுக்கு விண்ணப்பிக்கும் ஒற்றையர்களுக்கு உடன் குடியிருப்பவரைச் சமூக சேவை அமைப்பான 'குட் நியூஸ் கம்யூனிட்டி சர்வீசஸ்' தேர்வுசெய்து தரும்.
இத்திட்டத்திற்காக ஓரறை, ஈரறை வீடுகள் கொண்ட இரு வாடகை அடுக்குமாடிக் கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று புளோக் 429A பிடோக் நார்த் ரோடு. மற்றொன்று புளோக் 999A புவாங்காக் கிரெசண்ட் ஆகும்.
இரு தளங்களிலும் கிட்டத்தட்ட 270 பேர் தங்கலாம் என்று கூறப்படுகிறது.
வாடகைதாரர்களில் முதல் பிரிவினர் அடுத்த மாத இறுதிக்குள் வாடகை வீடுகளில் குடியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீவக குறிப்பிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு தளங்களிலும் இம்முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை 'குட் நியூஸ் கம்யூனிட்டி சர்வீசஸ்' அமைப்பு ஏற்றுள்ளது.
ஒற்றையர்களுக்கு உடன் குடியிருப்பவரைத் தேர்ந்தெடுப்பதுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்வதற்கான ஏற்பாடுகளையும் அமைப்பு நிர்வகிக்கும். வாடகைதாரர்களுக்காக வீட்டில் தடுப்புகள் பொருத்தப்படும் என்று வீவக கூறியது.
அத்துடன் வாடகைக்கு இருப்பவர்களின் பயன்பாட்டுக்காக அலமாரிகள், துணிச் சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்ற வீட்டுக்குத் தேவைப்படும் பொதுவான பொருள்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படும்.
புதிய மாதிரித் திட்டத்தின் கீழ், அந்தந்த நபருக்கு வீட்டை ஒதுக்குவதற்கு முன்னதாக அமைப்பு முதலில் விண்ணப்பித்தவர்களைப் பேட்டி காணும். அவர்களின் குணநலன்கள், தேவைகளின் அடிப்படையில் வாடகைதாரர்கள் மதிப்பிடப்படுவர்.
பாலினம், சமயம், இனம், பேசும் மொழிகள், வயது, வாழ்க்கைமுறை, வேலை போன்ற அம்சங்கள் தொடர்பில் இருவரை ஒரே வீட்டில் தங்க வைப்பதற்குச் சமூக சேவை ஊழியர் ஒருவர் பொறுப்பேற்பார்.
வாடகைதாரர்களில் பெரும்பாலானோருக்குக் குடும்ப ஆதரவு இல்லாமல் போகலாம். இதனால் உடன் குடியிருப்பவரது துணையும் ஆதரவும் பலனளிக்கும் என்று வீவக குறிப்பிட்டது.
புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் மூன்றாவது தளத்தை அமைப்பது தொடர்பில் வீவக அடுத்த மாதம் ஏலக் குத்தகைக்குக் கோரியுள்ளது.

