இல்லப் பணிப்பெண்கள் உட்பட சிங்கப்பூரின் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் மருத்துவக் காப்புறுதித் திட்டம் வழங்கும் பாதுகாப்பு, தற்போது சட்டரீதியாக நடைமுறையில் இருப்பதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரிக்கக்கூடும்.
சிங்கப்பூரிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைக்கும் மருத்துவக் காப்புறுதிப் பாதுகாப்பை மறுஆய்வு செய்துவரும் மனிதவள அமைச்சு, வருடாந்திர கோரிக்கைத் தொகை வரம்பான $15,000ஐ $60,000 அல்லது $100,000ஆக உயர்த்துவதைப் பரிசீலித்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆவணங்கள் மூலம் கண்டறிந்துள்ளது.
சந்தா தொகையைக் கட்டுப்படியாக வைத்திருக்க, காப்புறுதி நிறுவனங்களும் முதலாளிகளும் கோரிக்கைத் தொகையை பகிர்ந்துகொள்ளச் செய்வது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இதன்படி, முதல் $15,000ஐ காப்புறுதி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளலாம். எஞ்சிய தொகையைக் காப்புறுதி நிறுவனங்களும் முதலாளிகளும் 65%-35% அல்லது 75%-25% என்ற விகிதத்தின் பிரித்து ஏற்றுக்கொள்ளலாம்.
கட்டணங்களைக் குறைக்க, 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தொடர்பில் வெவ்வேறு சந்தா தொகையையும் அமைச்சு பரிசீலிக்கிறது. முதலாளிகள் முதலில் கட்டணம் செலுத்திவிட்டு தொகை கோருவதற்குப் பதிலாக மருத்துவக் கட்டணங்கள் தொடர்பில் சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் நிறுவனங்களுடன் காப்புறுதி நிறுவனங்கள் நேரடியாக அணுகுவது குறித்து விதிகள் மற்றும் நிபந்தனைகள் தொகுப்பு ஒன்றை வகுப்பதையும் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
முதலாளிகள், மருத்துவமனைகள், காப்புறுதி நிறுவனங்கள், அரசாங்கம் சாரா அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து தனது மறுஆய்வுக்காக ஆலோசனை பெற்றுவருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவப் பராமரிப்பை மேம்படுத்துவதே இலக்கு. அதேவேளையில் ஊழியர்களுக்கு மருத்துவச் செலவுகள் எதிர்பாராது அதிகளவில் ஏற்பட்டால் முதலாளிகளுக்குக் கூடுதல் நிதி பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று அமைச்சு திட்டமிடுகிறது.

