கொவிட்-19 கொள்ளைநோயால் தொடரும் சவால்களையும் விநியோகத் தொடர் தடைகளையும் உடைத்தெறியும் வகையில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடந்த மாதம் அதிகரித்திருந்தது.
எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் 24.2% உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் பதிவான 17.8% அதிகரிப்பை அடுத்து நவம்பரிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனால் 12வது மாதமாகத் தொடர்ந்து ஏற்றுமதிஅதிகரித்து வருகிறது என்று 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' நேற்று வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 30.3% அதிகரித்தது. அதை அடுத்து இவ்வாண்டு நவம்பரில்தான் ஆக அதிகமாகப் பதிவாகிஉள்ளது.
புளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளியல் வல்லுநர்களின் 15.3% முன்னுரைப்பையும் நவம்பர் மாத விகிதம் முறியடித்துள்ளது.
மின்னணுவியல் ஏற்றுமதி நவம்பரில் 29.2% வளர்ச்சி கண்டது. இது அக்டோபரில் 14.9 விழுக்காடாக இருந்தது.
மின்னணுவியல் அல்லாத ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 22.7% வளர்ச்சி கண்டது. முந்தைய மாதத்தில் இது 18.8 விழுக்காடாக இருந்தது. மாத அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 1.1% அதிகரித்துள்ளது. இதனால் $16.5 பில்லியனை எட்ட முடிந்தது.
அடுத்த சில மாதங்களுக்கு விநியோகத் தொடர் தடைகள் நீங்கி வரும் நிலையில் எண்ணெய் சாரா ஏற்றுமதி மேலும் வலுவடையும் என்று பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

