மற்ற மாணவர்களுக்கு எந்நேரமும் தோள் கொடுக்கும் இயல்புடைய நட்டேஷைப் பாராட்டி அவரது பள்ளி பல விருதுகளை வழங்கிஉள்ளது. சிறப்பு மதிப்பெண்கள் பெறும் அதே நேரத்தில் காற்பந்து வீரராகவும் தேசிய மாணவர் படையில் 'மூன்றாவது சார்ஜண்ட்' அதிகாரியாகவும் உள்ள நட்டேஷ், நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பிரபலமாக இருந்தும் கர்வம் கொள்ளாமல் பிற மாணவர்கள் அணுகும்படியான எளிமையான குணம் படைத்தவர் என்று இவரின் வகுப்பாசிரியர் திருவாட்டி தன்யா கூறினார்.
"நல்ல பழக்கங்களுடைய மாணவர்கள் வெற்றி பெறுவர் என்பதற்கு நட்டேஷ் ஒரு முன்னுதாரணம். வீட்டுப்பாடங்களை நேரத்துடன் செய்வது முதல் வகுப்பறையைச் சுத்தம் செய்வதுவரை எல்லா வேலைகளையும் பொறுப்பாக அவர் செய்வதால் பிற்காலத்தில் ஓர் உன்னத நிலையை அடைவது திண்ணம் என நான் கருதுகிறேன்," என்று அவர் கூறினார். தாயாருடன் தாத்தா பாட்டியும் தன்னை வளர்த்து வந்ததாகக் கூறிய நட்டேஷ், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அந்தத் தாத்தா இறந்தபோது மனமுடைந்து போனதாகத் தெரிவித்தார்.
"அந்நேரத்தில் கொவிட்-19 தொடர்பான பல்வேறு அதிரடி மாற்றங்களும் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டன. தடுமாறாமல் அனைத்தையும் சமாளிப்பது அப்போது சிரமமாக இருந்தது," என்று அவர் கூறினார்.
இத்தருணத்தில் குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்களும் நட்டேஷுக்கு உற்சாகம் ஊட்டினர்.
காற்பந்து, கேளிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றில் நண்பர்களுடன் அவர் ஈடுபட்டபோதும் தமது கவனத்தை அந்த நண்பர் கூட்டம் சிதறடிக்கவில்லை என்றார் நட்டேஷ். நட்டேஷ் அன்பானவர், கட்டொழுங்கு மிக்கவர், மரியாதை அறிந்தவர் என்று பாராட்டிப் பேசினார் அவரின் தம்பி கவினேஷ் ரூபன், 14.
"வழக்கநிலை (ஏட்டுக்கல்வி) மாணவரான என் அண்ணன், கணிதப் பாடத்தில் எனக்கு வழிகாட்டியதால் நான் விரைவுநிலைக்கு முன்னேறி இருக்கிறேன்," என்று அவர் கூறினார். குடும்பப் பொறுப்புகளால் சில நேரங்களில் தாம் துவண்டு போகும்போது நட்டேஷ் தமக்குப் பக்கபலமாக இருப்பதாக அவரின் தாயார் ரேவதி இளங்கோவன், 39, கூறினார்.
'பிஎஃப்பி' எனப்படும் பலதுறைத் தொழிற்கல்லூரித் திட்டத்தின் மூலமாக தெமாசிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இணையப் பாதுகாப்பு, மின்னிலக்கத் தடயவியல் துறையில் பயில்வதற்கான இடத்தைப் பெற்றுள்ளார் நட்டேஷ்.
தமது கல்விப் பாதையின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமானதைச் செய்வதுடன் எந்நேரமும் தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டும் என்று நட்டேஷ் கேட்டுக்கொண்டார்.
படங்கள்: திமத்தி டேவிட்

