மொத்தம் $31,023 மதிப்புள்ள சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த 46 வயது வெளிநாட்டவர் ஒருவர் கடந்த புதன்கிழமை சிக்கினார்.
அன்றைய தினம் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த 23 பயணிகளில் அவரும் ஒருவர். மேலும் $20,000க்கும் அதிகமான பணத்தை அறிவிக்கத் தவறியதற்காக அல்லது சிகரெட், மதுபானம், பிற பொருட்களுக்கு வரி செலுத்தத் தவறியதற்காக மற்றவர்கள் பிடிபட்டனர்.
காவல்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை ஆகியவை நேற்று முனையம் 1, 3 ஆகியவற்றில் நடத்திய ஏழு மணிநேர நடவடிக்கையைத் தொடர்ந்து பயணிகள் பிடிபட்டதாகத் தெரிவித்தன.
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தன.
"கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் எங்கள் விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்ட குற்றங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக எங்கள் நிலம், வான், கடல் எல்லைகளைப் பாதுகாக்க நாங்கள் முயற்சி செய்வதால், எந்தவொரு சட்டவிரோதச் செயல்களையும் அதிகாரிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை அனைத்து பயணிகளுக்கும் நினைவுபடுத்துகிறோம்," என்று அந்த அமைப்புகள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட 23 பயணிகளில் 57 வயது வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவார். அவர் தன்னிடம் வைத்திருந்த $25,000 மதிப்புள்ள சிங்கப்பூர், வெளிநாட்டு நாணயங்களை அறிவிக்கத் தவறிவிட்டார்.
மேலும் 21 பேர், வரியில்லா சலுகையைத் தாண்டி செலுத்த வேண்டிய வரி செலுத்தப்படாத சிகரெட் அல்லது புகையிலைப் பொருட்கள், மதுபானங்களை வைத்திருந்தனர்.
பயணிகள் அல்லது சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள், Customs@SG எனும் இணையத் தளத்தில் அவர்கள் இங்கு வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு வரை வரி அல்லது பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தப்பட வேண் டிய பொருட்களுக்கான முன் அறிவிப்பு மற்றும் பணம் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

