இங்குள்ள பெரும்பாலான பொது மருத்துவமனைகள், அதிகரித்து வரும் செலவினங்களைச் சமாளிப்பதற்கான கால மறுஆய்வின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தங்கள் விபத்து, அவசரநிலை சிகிச்சைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளன.
விபத்து, அவசரநிலை வருகைக்கான கட்டணம் இப்போது $116 முதல் $132 வரை இருக்கும். இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியில் மருத்துவமனைகள் கட்டணங்களை உயர்த்தத் தொடங்கும் முன் அது $110 முதல் $126 வரை இருந்தது.மருத்துவரின் ஆலோசனை, தாதிமைப் பராமரிப்பு, சிகிச்சை ஆகியவற்றுக்கான கட்டணம் இது.
இதில் சிறுநீர் அல்லது ரத்த சர்க்கரை பரிசோதனைகள், பிளாஸ்டிக் வார்ப்பு, காயத்துக்கான எளிய தையல், காயத்திற்குக் கட்டுப்போடுதல் போன்ற அடிப்படை நடைமுறைகள் மற்றும் வழக்கமான மருந்துகள் போன்றவை இதில் அடங்கும்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை ஆகியவை கடந்த ஆண்டு விபத்து, அவசரநிலை சேவைகளுக்கு $121 வசூலித்ததாகவும் கூ டெக் புவாட் மருத்துவமனை கட்டணம் $122 வசூலித்ததாகவும் அவற்றின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நான்கு மருத்துவமனைகளும் இப்போது விபத்து, அவசரநிலை சேவைகளுக்கு $128 வசூலிக்கின்றன.
சாங்கி பொது மருத்துவமனையில் விபத்து, அவசரநிலை வருகைக்கு இப்போது $132 செலவாகும். இது முன்பு $126 ஆக இருந்தது.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை ஆகியவற்றில் விபத்து, அவசரநிலை கட்டணம் கடந்த ஆண்டு $120 ஆக இருந்தது, தற்போது $127 ஆக உள்ளது. டான் டோக் செங் மருத்துவமனையின் கட்டணம் மட்டும் 2019 முதல் $128 ஆக மாறாமல் உள்ளது.
அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில், நோயாளிகள் இப்போது அவசரநிலை சேவைகளுக்கு $116 செலுத்துகின்றனர். இது முன்பு $110 ஆக இருந்தது. அதன் 24/7 நேரடி அவசர பராமரிப்பு மையம் மருத்துவ அவசரநிலைகளைக் கையாளுகிறது.
ஆனால் மாரடைப்பு அல்லது கடுமையான பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுடன் வருபவர்களை இந்த மையம் ஏற்றுக்கொள்ளாது.
படுக்கைகள், மருத்துவ ஆலோசனைகள் போன்ற பிற விஷயங்களுக்கான கட்டணத்தையும் பொது மருத்துவமனைகள் உயர்த்தின.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, டெங் ஃபோங் பொது மருத்துவமனை, அலெக்சாண்ட்ரா மருத்துவமனை, ஜூரோங் மருத்துவ மையம் ஆகியவற்றில் ஏப்ரல் 28 அன்று வார்டு கட்டணங்கள், சிறப்பு வெளிநோயாளி மருந்த கங்கள், அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் சிறிய அளவில் கட்டண சரிசெய்தலை மேற்கொண்ட தாக தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி திரு சியா கெங் ஹாங், "எங்கள் மருத்துவ மனைகள் இந்த ஆண்டு வெவ்வேறு அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மானியம், தனியார் மருத்துவ சேவைகளுக்குக் கட்டண திருத்தங்களைச் செய்தன," என்று கூறினார்.
சிங்ஹெல்க் குழுமத்தின் கீழ் வரும் மருத்துவமனைகள் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை செங்காங் பொது மருத்துவமனை ஆகும்.

