கடந்த 2014ஆம் ஆண்டு பணிப்பெண்ணை ஆடவர் ஒருவரின் மனைவி தாக்கியதைத் தொடர்ந்து, பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்த அந்தக் குடும்பத்திற்கு மனிதவள அமைச்சு தடை விதித்து இருந்தது.
ஆனாலும், சையது முகமது பீரன் சையது அமீர் ஹம்சாவும் (வயது 41) அவரது மனைவி சாபா பர்வீனும் அந்தத் தடையை மீறி மூன்றாம் தரப்பிடம் இருந்து பணிப்பெண்ணை வரவழைத்து இருந்தனர்.
இந்தத் தகவல் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டதை அறிந்த தம்பதி, அந்தப் பணிப்பெண்ணை இந்தோனீசியாவுக்கு அனுப்பிவிட்டனர்.
இந்தக் குற்றத்தின் தொடர்பில் இந்தியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான சாபா பர்வீனுக்கு மூன்று நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது கணவருக்கு, பணிப்பெண்ணை தமது குடும்பத்தில் வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக பொய்யான உறுதிமொழி அளித்த குற்றத்திற்கும் சேர்த்து 36 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு தமது பணிப்பெண்ணை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக சாபா பர்வீன் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.