கட்டடத்தின் உள்ளே மேல்பகுதியில் அமைந்துள்ள நீர்தெளிப்பான் கருவிகள் பழுதடைந்ததன் காரணமாக பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியின் ஒரு பகுதி சனிக்கிழமை (டிசம்பர் 17) மறைக்கப்பட்டு இருந்தது.
சில கடைகளில் தண்ணீர் ஒழுகியதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளை வாடிக்கையாளர்கள் நெருங்காதபடி மறைப்புகள் அமைக்கப்பட்டன.
தண்ணீர் ஒழுகுவதன் காரணமாக தூய்மைப் பணிகளுக்காக சில கடைகள் தற்காலிகமாக மூடப்படலாம் என ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட தகவல் தெரிவித்தது.
கடைத்தொகுதியின் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றினுள் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நீர்தெளிப்பான் கருவி ஒன்று பெயர்ந்துவிட்டதாகவும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குத்தகைப் பணி காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றது அத்தகவல்.
இதன் காரணமாக பல கடைகளிலும் மின்படிக்கட்டுகளிலும் மேலிருந்து தண்ணீர் ஒழுகியது.
சில மின்தூக்கிகள், நடைபாதைகள் ஆகியனவும் பாதிக்கப்பட்டன.
மூன்றாவது தளத்தில் இருந்து கீழ்த்தளம் வரை தண்ணீர் ஒழுகியது.
தூய்மைப் பணிகளுக்காக சில கடைகள் மூடப்பட்டதாகவும் கடைத்தொகுதியின் இதர வர்த்தகங்கள் வழக்கம்போல நடைபெறுவதாகவும் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.
கடை ஒன்றினுள் மழை பெய்வதுபோல தண்ணீர் சரமாரியாக ஒழுகுவதைக் காட்டும் காணொளி ஒன்றைக் கண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையப்பக்கம் தெரிவித்தது.

