புதிய 120 கிலோமீட்டர் சைக்கிள் பாதையில் சில சாலைகளின் ஒருபகுதியை சேர்க்கலாமா என்பது குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்திலுள்ள சுமார் 50 சாலைகளின் சில பகுதிகளை மீட்பது குறித்த ஆய்வு அது. அந்தச் சாலைகளில் சில வெஸ்ட் கோஸ்ட் ஹைவே, காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட், ஹும் அவென்யூ, தோ தக் அவென்யூ மற்றும் பூன் லே வே போன்ற பகுதிகளில் உள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,300 கிலோமீட்டர் தூர சைக்கிள் பாதையை அமைப்பதற்கான அரசாங்கத்தின் ஆக அண்மைய முயற்சி இந்த ஆய்வு.
சிங்கப்பூரில் தற்போது கிட்டத்தட்ட 460 கிலோமீட்டர் நீள சைக்கிள் பாதைகள் உள்ளன.
மேற்கு வட்டாரத்தில் சைக்கிள் பாதைக் கட்டமைப்பையும் அது தொடர்பான உள்கட்டமைப்பையும் வடிவமைக்க பொறியியல் ஆலோசனை சேவை நிறுவனங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நாடி வருவதை அதன் ஏலக்குத்தகை ஆவணங்களின் அடிப்படையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் பல்வேறு நகரப் பகுதிகளின் சைக்கிள் கட்டமைப்பு மேம்படும்.
இவற்றில் ஜூரோங் வெஸ்ட் வட்டாரம்தான் அதிக பலனடையும். அங்கு 38 கிேலாமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பாதைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக குவீன்ஸ்டவுன் வட்டாரத்தில் 31 கிலோமீட்டர் சைக்கிள் பாதை அமைக்கும் திட்டம் உள்ளது. தொடர்ந்து, புக்கிட் பாத்தோக்கில் 26 கிலோமீட்டர், கிளமெண்டியில் 18 கிலோமீட்டர், ஜூரோங் ஈஸ்ட்டில் 3 கிலோமீட்டர் என பட்டியல் நீள்கிறது.
இவை தவிர, சில தொழிற்பேட்டை வட்டாரங்களிலும் சைக்கிள் பாதைக் கட்டமைப்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த வரிசையில், ஈசூனில் 5 கிலோமீட்டர், உட்லண்ட்ஸில் 2 கிலோமீட்டர், ெசம்பவாங்கில் 0.4 கிலோமீட்டர் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று கட்டங்களாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூரோங் லேக் வட்டாரத்தில் 7.6 கிலோமீட்டர் நீள பூங்கா இணைப்புக் கட்டமைப்புக்கான தெரிவையும் ஏலக்குத்தகை ஆவணங்கள் உள்ளடக்கியுள்ளன.

