நிலவில் கலை சொல்லும் சிங்கப்பூர் கலைஞர்

கி.ஜனார்த்­த­னன்

நுணுக்­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட முப்­ப­ரிமாண கன­ச­து­ரம், நில­வுக்கு அடுத்த ஆண்டு அனுப்­பப்­படும் கலைப்­ப­டைப்­பு­களில் இடம்பெறும் சிங்­கப்­பூர் படைப்­பா­கும்.

நெதர்­லாந்­தில் தளம் கொண்டுள்ள நிலவு கலைக்­கூட அற­நி­று­வ­னம் தேர்ந்­தெ­டுத்­துள்ள நூறு கலைப்­படைப்­பு­களில் ஒன்­றான இந்த கன­ ச­து­ரத்தை உள்­ளூர் கலை­ஞர் லட்­சுமி மோகன்­பாபு, 53, வடி­வ­மைத்­தி­ருக்­கி­றார்.

‘ஸ்டி­ரக்ச்­சர் அன்ட் ரிப்­ளெக்­டன்ஸ்’ ( Structure & Reflectance) என்ற அந்­தக் கன­ச­து­ரம், பக­டைக் காயை­விட சிறியது. கன­ச­து­ரத்­தின் ஒவ்­வொரு பக்­கம் 0.98 சென்டி மீட்­டர்.

கன­ச­து­ரத்­தின் பக்­கங்­களில் நான்கு பக்­கங்­கள் ஒவ்­வொன்­றிலும் தனித்­தன்­மை­யான வடி­வங்­கள் உள்­ளன. நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இணைப் பேரா­சி­ரி­யர் மெட்­டியோ செய்ட்­டா­வு­டன் இணைந்து அவர் இதை உருவாக்கி உள்ளார்.

வெவ்­வேறு படி­கங்­க­ளா­லும் துருப்­பி­டிக்காத எஃக்­கா­லும் செய்­யப்­பட்­டுள்ள கன­ச­து­ரத்தை வெவ்­வேறு கோணங்­க­ளி­லி­ருந்து காணும்­போது வேறு நிறங்­களில் தோற்­றம் அளிக்­கும்.

10 சென்­டி­மீட்­டர் அகல, 10 சென்டிமீட்­டர் நீள 1 சென்­டி­மீட்­டர் ஆழத்­தைக் கொண்­டுள்ள ஒரு பேழைக்குள் திரு­வாட்டி லட்­சு­மி­யின் கலைப்­ப­டைப்பு சேர்க்­கப்­படும்.

2022 ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரியில் இந்­தப் பேழையைச் சுமந்துகொண்டு என்ஜி-17 என்ற விண்­க­லம், பூமியிலி­ருந்து விண்­வெ­ளிக்­குப் புறப்­படும்.

இந்­தத் திட்­டத்­திற்­காக இது­வரை­ தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல் சிங்­கப்­பூ­ர­ரின் கலைப்­ப­டைப்பு திரு­மதி லட்­சு­மி­யு­டை­யது ஆகும்.

இப்போது சிங்­கப்­பூ­ர­ராக இருக்­கும் திரு­மதி லட்­சுமி, கேரளா­வில் பிறந்து சோவி­யத் யூனி­ய­னின் ஆக்­கி­ர­மிப்­பில் அப்­போது இருந்த ஆப்­கா­னிஸ்­தா­னில் வளர்ந்­த­வர்.

ஐக்­கிய நாடு­கள் அமைப்­பில் இவரது தந்தை கிரா­மப்­பு­றத் திட்ட அதி­கா­ரி­யாக செயல்­பட்­டார். இல்­லத்­த­ர­சி­யான தாயா­ரால் இரண்டு சகோ­த­ரர்­க­ளு­டன் வளர்க்­கப்­பட்ட லட்­சுமி பாது­காப்­பாக வளர்ந்­த­போதும் சுற்றிலும் வன்­மு­றை­யும் பூச­லும் அன்­றாட நிகழ்­வு­க­ளாக இருந்­தன.

அடிக்­கடி பல இடங்­களில் வெடி­குண்டு மழை பொழி­யும். அத்தகைய ஒரு சூழ­ல் காரணமாக வாழ்க்கை எப்­போது வேண்டு­மானா­லும் எப்படி வேண்டுமானாலும் மாறக்­கூ­டி­யது என்ற ஒரு தெளிவு தம்மிடம் ஏற்பட்டு உள்ளதாகக் கூறி­னார் திரு­மதி லட்­சுமி.

ஆப்­கா­னி­லுள்ள ஐக்­கிய நாடு­கள் அலு­வ­ல­கத்­தில் பல்­வேறு இனத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் வளர்ந்­த­தால் நல்­லி­ணக்­கத்­தின் மதிப்பை உணரமுடிந்­த­தா­க இவர் மேலும் தெரிவித்தார்.

உல­கி­லுள்ள மனி­தர்­கள் வேறு­பட்­ட­வர்­க­ளாக இருந்­தா­லும் அனை­ வ­ரும் ஒரே உல­கில் இணைக்­கப்­பட்­டி­ருப்­பதை தமது வடி­வம் காட்டு­ வ­தாக லட்­சுமி கூறி­னார்.

“பல இடுக்­கு­க­ளைக் கொண்­டி­ருந்­தா­லும் உண்­மை­யி­லேயே இது ஒரு வகை­யான வட்­டம்,” என்றார் அவர். இந்­திய கலா­சா­ரங்­களில் இடம்பெறும் மண்­டல ஓவி­யங்­களைப் போல தமது வடி­வம் இருப்­பதா­க அவர் தெரி­வித்­தார்.

“இந்­திய பாரம்­ப­ரிய கலை­யில் மண்­ட­லங்­கள் பிர­பஞ்­சங்­க­ளைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கின்­றன. எனது வடி­வ­மும் உல­கத்­தைப் பிர­தி­ப­லிப்­ப­தா­கக் கரு­து­கி­றேன்,” என்­றார்.

“கோயில்­களில் மட்­டு­மின்றி தேவா­ல­யங்­க­ளி­லும் பள்­ளி­வா­சல்­களி­லும் வடி­வி­யல் வடி­வ­மைப்­பு­கள் (geometric design) இருக்­கின்­றன. பல்­வேறு கலா­சா­ரங்­க­ளின் கலவை இது,” என்­றார் திரு­மதி லட்­சுமி.

1986 முதல் 1991 வரை டெல்லி­யில் மணி­பால் தொழில்­நுட்­பக் கல்வி நிலை­யத்­தில் கட்­ட­டக் கலை யில் பட்டக்கல்வியை முடித்த திரு­மதி லட்­சுமி­யின் கலைப்­ப­டைப்­பு­களில் கட்­ட­டக் கலைக்­கு­ரிய கோடு­க­ளைச் சார்ந்த, அள­வு­க­ளைச் சரி­யான முறை­யில் கணித்து வரை­யப்­படும் பாணி தென்­ப­டு­கிறது.

அங்­கு­தான் அவர், நிலவு கலைப்­பொ­ரு­ளுக்­கா­கப் பயன்­ப­டுத்­திய வடி­வமைப்பு முத­லில் உத­ய­மா­ன­தா­கத் தெரி­வித்­தார்.

அத்­து­டன் தமது வடி­வங்­களை ஓவி­யங்­க­ளா­க­வும் சிற்­பங்­க­ளா­வும் மட்­டும் வெளிப்­ப­டுத்­தா­மல் கம்­பளி­கள், மேசை­கள், நாற்­கா­லி­கள், ஆப­ர­ணங்­கள் எனப் பல பொருட்­க­ளா­க­வும் உரு­வாக்க முனைந்­துள்­ளார்.

தொலை­தொ­டர்­புத் துறை­யில் பணி­யாற்­றும் தமது கண­வ­ரு­டன் பன்னிரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு, சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்த லட்­சுமி, தாம் ஆக அதிக ஆண்­டு­கள் வாழ்ந்த ஒரே நாடு சிங்­கப்­பூர் எனத் தெரி­வித்­தார்.

“இத­னால் நான் என்­னைச் சிங்­கப்­பூர் ஓவி­யர் என அடை­யா­ளப்­ப­டுத்து­கி­றேன். பல்­வேறு கலா­சா­ரங்­கள் ஒன்­றி­ணை­யும் புள்­ளி­யான சிங்­கப்­பூர், ஒற்று­மை­யைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்ட எனது படைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்கு சிறந்த, பாது­காப்­பான இடம்,” என்று அவர் கூறி­னார்.

ஓவி­யக்­ க­லை­ஞர்­க­ளுக்கு அர­சாங்­கத்­தின் ஆத­ர­வுத் திட்­டங்­கள் இருந்­தா­லும் கலை­ஞர்­கள் சொந்­தக்­கா­லில் நிற்­க­வேண்­டிய நிலை­யில் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

சில நேரங்­களில் ஓவி­யக்­கலை சில­ரால் நல்ல பணியாக மதிக்­கப்­ப­டு­வ­தில்லை என்­றும் அவர் கூறி­னார்.

“நாம் பார்க்­கும் ஒவ்­வொரு பொரு ளும் ஓர் ஓவி­யம், ஒரு வடி­வ­மைப்பு என்­பதை மக்­கள் உண­ரும்போது கலை­ஞர்­கள் மீதான மதிப்பு உய­ரும்,” என்று அவர் கூறி­னார்.

நிலவு வரை செல்­ல இருக்கும் தமது வடி­வங்­கள் உல­கின் பல்­வேறு நாடு­களி­லும் நகர்ப்­பு­றங்­க­ளி­லும் சிற்­பங்­களா­க­வும் கட்டட ஓவி­யங்­க­ளா­க­வும் பூக்­க­வேண்­டும் என்­பதே இவ­ரது கனவு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!