தடுப்பூசி போட்டோருக்கான தரை வழிப் பயணத்திற்கு சிங்கப்பூரும் மலேசியாவும் அனுமதி வழங்கியுள்ளன. முதல் நாளான நேற்று சிங்கப் பூரர்கள் பலர் உற்சாகத்துடன் எல்லையைக் கடந்து மலேசியாவுக்குச் சென்றனர்.
இவர்களில் திருமதி பியாங் லீ சானும் ஒருவர். ஜோகூரில் உள்ள குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக எட்டு மணி நேரம் நின்று பேருந்து நுழைவுச் சீட்டை அவர் வாங்கி யிருந்தார்.
இல்லத்தரசியான திருமதி பியாங்,40, அவரது கணவர் பாங் யீ ஹாவ், 42, ஆகிய இருவரும் மலாக்காவில் உள்ள குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்துவதற்காக நேற்று புறப்பட்டுச் சென்றனர்.
கொவிட்-19 கிருமி பரவத் தொடங்கிய பிறகு முதல் முறையாக அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைச் சந்திக்கின்றனர்.
"என்னுடைய குழந்தைகள் துள்ளிக் குதித்துக் கொண்டாடுகின்றனர். பேருந்துச் சீட்டு கிைடத்ததா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் சிங்கப்பூரரான திருமதி பியாங் தெரிவித்திருந்தார். அவரது கணவர் மலேசியர்.
விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதைத் திட்டத்தின் (விடிஎல்) கீழ் தடுப்பூசி போட்ட சிங்கப்பூரர்கள் ஜோகூர் கடற்பாலம் வழியாக மலேசியாவுக்குள் நுழையலாம். தனிமைப்படுத்த மாட்டார்கள்.
இதே ஏற்பாட்டின்கீழ் மலேசியர்களும் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதி பெற்றவர்கள் மட்டும் விடிஎல் வழியாக தங்களுடைய நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்ட பிறகு 50 விழுக்காடு கூடுதலாக நுழைவுச் சீட்டுகளை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக டிரான்ஸ்டார், காஸ்வேலிங்க் பேருந்து நிறுவனங்கள் தெரிவித்தன.
அதாவது நுழைவுச் சீட்டுகள் முழுமையாக விற்கப்பட்டால் நாள்தோறும் 4.320 பேர் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனிமைப்படுத்தல் இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.
உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்ஸ்டார் பேருந்து நிலையத்திலும் குவின் ஸ்திரீட்டில் உள்ள காஸ்வே லிங்க் பேருந்து நிலையத்துக்கும் நேற்று காலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சென்றபோது நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதைக் காண முடிந்தது.
பெரும்பாலான பயணிகள் மலேசியா செல்வதற்குத் தேவையான தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு முந்திய தொற்று இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை முடிவு கள் போன்ற ஆவணங்களை கையில் வைத்திருந்தனர்.
ஆனால் ஜோகூருக்குச் செல்லும் 80 முதல் 90 விழுக்காடு பயணிகள் சிங்கப்பூரர்கள் அல்லர் என்று டிரான்ஸ்டார் டிராவல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்சன் யாப் தெரிவித்தார்.
மலேசியாவில் குடும்ப உறுப்பினர்கள் உள்ள சில சிங்கப்பூரர்கள் மட்டுமே அங்கு செல்வதாகவும் அவர் சொன்னார்.
மிகச் சிலரே பொழுதுபோக்குக்காக மலேசியா செல்வதாகவும் அவர் நேற்று தெரிவித் தார்.

